ஹார்வே வெயின்ஸ்டீன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு, "திகில் படம்" ஒன்றை எடுக்க உள்ளதாக ஹாலிவுட் இயக்குனர் ப்ரியான் டி பல்மா கூறியுள்ளார். 1970களிலும் 80களிலும், திகில் படங்களான கேரி மற்றும் ஸ்கார்ஃபேஸ் ஆகியவற்றை இயக்கிய டி பல்மா, "இந்த சம்பவத்தை தொடர்ந்து கவனித்து வருவதாக" ஏ எஃப் பி செய்தி முகமையிடம் தெரிவித்தார்.
பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட ஹாலிவுட் முன்னாள் தயாரிப்பாளர் ஹார்வே வெயின்ஸ்டீன், கடந்த வாரம் நியூயார்க் போலீஸாரிடம் சரணடைந்தார். வெயின்ஸ்டீன் மீதான குற்றச்சாட்டுகளை, அவரது வழக்கறிஞர் மறுத்துள்ளார்.
இதில் நிறைய பேர் ஈடுபட்டுள்ளனர் என்று எனக்கு தெரியும். கடந்த சில ஆண்டுகளில் நான் நிறைய கதைகளை கேள்விப்பட்டுள்ளேன்" என்று 77 வயதான டி பல்மா தெரிவித்துள்ளார். "நடிகர்களின் நம்பிக்கையையும் அன்பையும் இயக்குநர்கள் பெற வேண்டும். தங்களின் இச்சைக்காக அதனை மீறுவது, ஒருவர் செய்யக்கூடிய மோசமான காரியம்" என்றும் அவர் தெரிவித்தார். வெயின்ஸ்டீனால் பாலியல் துன்புறுத்தல் மற்றும் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளதாக, அவர் மீது பல பெண்கள் புகார் அளித்தனர்.
இந்நிலையில், பாலியல் வன்கொடுமை, குற்றவியல் பாலியல் கொடுமை, பாலியல் துஷ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகளுக்காக கடந்த வாரம் வெயின்ஸ்டீன் கைது செய்யப்பட்டார். சட்டத்திற்கு புறம்பாக செக்ஸ் வைத்துக் கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை வெயின்ஸ்டீன் மறுத்துள்ளார். பிரான்ஸ் நாட்டு தயாரிப்பாளருடன் கலந்தாலோசித்து தான் எடுக்கவிருக்கும் படத்தின் கதையானது, சினிமா துறையில் நடைபெறும் இவ்வாறான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் நோக்குடன் இருக்கும் என்று கூறினார். எனினும், தன் கதையின் கதாபாத்திரத்தின் பெயர் ஹார்வி வெயின்ஸ்டீன் அல்ல என்று அவர் தெரிவித்தார். "ஆனால், இது ஒரு திகில் படம். சினிமா துறையின் உள்ளேயே இந்த கதை நகரும்" என்று ஃபிரஞ்சு நாளிதழான லெ பரிசினிடம் டி பல்மா கூறினார்.
பாலியல் கொடுமை, குற்றவியல் பாலியல் சட்டத்தின் கீழ் வெயின்ஸ்டீன் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 25 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளாதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அவரின் கைது, குற்றஞ்சாட்டிய பல்வேறு நபர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது ஒரு "குறிப்பிடத்தக்க தருணம்" என நடிகை ரோஸ் மெக் கொவன் புகழ்ந்துள்ளார்.