ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்து ஆலோசிப்பதற்காக இஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகளின் மாநாட்டை நடத்த சவுதி முடிவு செய்துள்ளது.
சமீபத்தில் மத்திய அரசு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததோடு, அதனை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து அறிவித்தது. ஆரம்பம் முதல் பாகிஸ்தான் இதற்கு கடும் தெரிவித்து வரும் நிலையில், இதுகுறித்து சவுதியிடம் முறையிட்டிருந்தது. இந்நிலையில், ஒரு நாள் பயணமாக பாகிஸ்தான் சென்றிருந்த சவுதி வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்கான் காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் மாநாட்டை கூட்ட திட்டம் உள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷியிடம் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது பற்றியும், குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை பற்றியும் சவுதி வெளியுறவு அமைச்சரிடம் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து 57 இஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகளை கொண்ட இந்த அமைப்பின் மாநாடு விரைவில் நடைபெறும் என கூறப்படுகிறது.