ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அந்த நாட்டில் ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தலிபான்கள் ஆப்கானைக் கைப்பற்றியுள்ளதையடுத்து, அங்குள்ள தங்கள் குடிமக்களை அழைத்து வர பல்வேறு நாடுகள் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்தியாவும் தங்கள் குடிமக்களை ஆப்கானிஸ்தானில் இருந்து அழைத்து வர தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் தலிபான்கள், தங்களது இயக்கத்தின் மூத்த தலைவரான ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டான்க்சாய் பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடனான தங்கள் உறவு குறித்து ஸ்டான்க்சாய் பேசியுள்ளார்.
வீடியோவில் இந்தியாவுடனான உறவு குறித்து பேசிய அவர், "இந்த துணைக் கண்டத்திற்கு இந்தியா மிகவும் முக்கியமானது. கடந்த காலங்களைப் போலவே, இந்தியாவுடனான எங்களது கலாச்சார, பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளைத் தொடர விரும்புகிறோம். பாகிஸ்தான் வழியாக இந்தியாவுடன் செய்யப்படும் வர்த்தகம் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. விமான வழித்தடத்தின் மூலமாக இந்தியாவுடன் வர்த்தகம் செய்வதற்கான வழிகளும் திறந்தே உள்ளன. இந்தியாவுடனான எங்கள் அரசியல், பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து வருகிறோம். இது சம்பந்தமாக இந்தியாவுடன் பணியாற்றுவதை எதிர்நோக்கியிருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.