அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்தில், மூன்று மஜாஜ் நிலையங்களில் கடந்த புதன்கிழமை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஆறு ஆசிய பெண்கள் உள்ளிட்ட 8 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக 21 வயது நபர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
துப்பாக்கி சூடு சம்பவத்தையொட்டி அமெரிக்காவில், ஆசிய அமெரிக்கர்கள் மீதான வன்முறைக்கு எதிராக ஆசிய அமெரிக்கர்கள் மற்றும் பசிபிக் தீவு நாடுகளை பூர்விகமாக கொண்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு கடந்த ஒருவருடத்தில் ஆசிய அமெரிக்கர்கள் மற்றும் பசிபிக் தீவு நாடுகளை சேர்ந்தவர்கள் மீதான வன்முறை, அவர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு ரீதியிலான குற்றங்கள் அதிகரித்து வருவதாக ஸ்டாப் ஏ.ஏ.பி.ஐ ஹேட் (STOP AAP HATE) என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. முன்னாள் அதிபர் ட்ரம்ப், கரோனா வைரஸை சீன வைரஸ் என அழைத்த பின்னர், ஆசிய அமெரிக்கர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் இந்த துப்பாக்கிசூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஜோ பைடன், இனவாதம் மற்றும் இனவெறி ஆகியவற்றின் போது தேசம் உடந்தையாக இருக்கக்கூடாது. இனவாதம் மற்றும் இனவெறியை பார்க்கும்போது மவுனமாக இருப்பது அதற்கு உடந்தையாக இருப்பதாகும். நாம் அதற்கு உடந்தையாக இருக்க முடியாது. அதற்கு எதிராக நாம் குரலெழுப்ப வேண்டும். அதற்கெதிராக நாம் செயலாற்ற வேண்டும் என தெரிவித்தார்.
அமெரிக்க குடியரசு துணை தலைவரும், அமெரிக்காவில் உயர்ந்த பதவியை வகிக்கும் முதல் தெற்காசிய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் இதுகுறித்து பேசுகையில், "அமெரிக்காவில் இனவாதம், அந்நியர்கள் மீதான வெறுப்பு உண்மையானது. அது எப்போதும் இருந்து வருகிறது. பாலினப்பாகுபாடும் இருந்து வருகிறது. ஜனாதிபதியும் நானும் அமைதியாக இருக்க மாட்டோம். இவற்றுக்கு நாங்கள் துணை நிற்க மாட்டோம். வன்முறை, வெறுப்பு ரீதியிலான குற்றங்கள் மற்றும் பாகுபாடுகள் எங்கு எப்போது நடந்தாலும் அதற்கு எதிராக குரலெழுப்புவோம்" என கூறினார்.