உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் எட்டு நாட்களைக் கடந்து நீடித்து வரும் நிலையில், அங்கிருந்து தப்பிக்க முடியாமல் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் தினந்தோறும் வீடியோக்களை வெளியிட்டு இந்திய அரசிடம் உதவி கேட்டு வருகின்றனர். இந்நிலையில், உக்ரைனின் இந்திய மாணவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்ததாகத் தகவல் வெளியான நிலையில், இந்தியத் தூதரகத்திடமிருந்து எதிர்பார்த்த நேரத்தில் உதவிகள் கிடைக்கவில்லை என அந்த மாணவர் மருத்துவமனையிலிருந்து வெளியிட்ட வீடியோவில் தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் கீவ் நகரில் தங்கி தனது படிப்பை மேற்கொண்டு வந்த ஹர்ஜோத் சிங் எனும் அந்த மாணவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "இந்தியத் தூதரகத்திடம் இருந்து இதுவரை எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. நான் அவர்களுடன் தொடர்பு கொள்ள முயல்கிறேன். நான் அவர்களைத் தொடர்புகொண்ட போதெல்லாம், உடனடியாக எதாவது செய்கிறோம் என்று கூறுவார்கள். ஆனால், இதுவரை எந்த உதவியும் செய்யவில்லை.
பிப்ரவரி 27 அன்று, நாங்கள் மூன்று பேர் ஒரு காரில் ஏறி 3வது சோதனைச் சாவடிக்குச் சென்றுகொண்டிருந்தோம். பாதுகாப்பு காரணங்களுக்காக நாங்கள் அங்கு சென்றோம். அப்போது, எங்கள் கார் மீது திடீரென அடுத்தடுத்து தோட்டாக்கள் பாய்ந்தன. என்மீதும் தோட்டாக்கள் பாய்ந்தன. அப்படியே சரிந்து விழுந்தேன். பின்னர் மருத்துவமனையில் கண் விழித்தேன். என் நெஞ்சிலிருந்தும் ஒரு புல்லட் எடுத்ததாகச் சொன்னார்கள். என் கால் எலும்பு முறிந்துள்ளது. இப்போது கீவ் நகர மருத்துவமனையில் உள்ளேன்.
என்னைப் போன்று நிறைய ஹர்ஜோத்கள் கீவ் நகரில் சிக்கியுள்ளனர். பலர் அவர்கள் இருக்கும் குடியிருப்புகளிலேயே அடைபட்டுக் கிடக்கின்றனர். வெளியே என்ன நடக்கிறது என்று தெரியாமல் கூட முடங்கியுள்ளனர். ஒரு முறை தூதரக அதிகாரியிடம் பேசியபோது, 'நீங்கள் எங்களுக்கு முன்னதாகவே தூதரகத்தை காலி செய்துவிட்டு லிவ் நகருக்குச் சென்றுவிட்டீர்கள். தூதரகம் தானே மாணவர்களைக் காப்பாற்றியிருக்க வேண்டும்' என்று கேட்டேவிட்டேன்.
நான் செத்த பிறகு விமானம் அனுப்பினாலும் பரவாயில்லை... கடவுள் எனக்கு இரண்டாவது வாழ்க்கையைக் கொடுத்திருக்கிறார், நான் வாழ விரும்புகிறேன். என்னை இங்கிருந்து வெளியேற்றவும், சக்கர நாற்காலி போன்ற வசதிகளை வழங்கவும், ஆவணங்களுடன் எனக்கு உதவவும் தூதரகத்தைக் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் சுமார் 20,000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் படித்துவரும் நிலையில், இதுவரை அந்நாட்டிலிருந்து 9,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி தெரிவித்துள்ளார்.