பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான்கான் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் தெஹ்ரிக் - இ - இன்சாப் கட்சியின் தலைவர். நடந்து முடிந்த பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் இக்கட்சி கூடுதல் இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக வந்தது.
புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் ஓட்டெடுப்பு நடந்தது. பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கானும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (நவாஸ்) தலைவர் ஷாபாஸ் ஷெரீப்பும் போட்டியிட்டனர். இதில் 176 ஓட்டு வாங்கி இம்ரான் கான் வெற்றி பெற்றார். ஆகவே, அவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஷாபாஸ் ஷெரீப்புக்கு 96 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தது.
இஸ்லாமாபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று பதவி ஏற்பு விழா நடைபெற்றது. பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கானுக்கு ஜனாதிபதி மம்னூன் உசேன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.