திருச்செங்கோடு அருகே குடிபோதையில் நண்பன் என்றும் பாராமல் ரிக் தொழிலாளியை அடித்துக் கொன்ற 5 நண்பர்கள், உடலில் கல்லைக்கட்டி குட்டையில் வீசிவிட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள மண்டகபாளையத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன் ராஜசேகர் (24). ரிக் லாரி தொழிலாளி. இவர், ஜூலை 2ம் தேதி இரவு, கிரிவலப்பாதையில் உள்ள மலார்குட்டை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அங்குள்ள ஒரு ஆலமரத்தின் கீழே அவருடைய நண்பர்கள் 5 பேர் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ராஜசேகரைப் பார்த்த நண்பர்களுள் ஒருவரான விக்னேஷ் அவரையும் மது குடிக்க அழைத்தார். அங்கு சென்ற ராஜசேகர் அவர்களிடம் சகஜமாக பேசிக்கொண்டு இருந்தார். சிறிது நேரத்தில் அவர்களுக்குள் திடீரென்று வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது ராஜசேகரை அவருடைய நண்பர்கள் நான்கு பேர் கை, கால்களை அமுக்கிப் பிடித்துக் கொண்டனர். விக்னேஷ், அங்கிருந்த கல்லை எடுத்து ராஜசேகர் தலை மீது போட்டு கொலை செய்துள்ளார். ஆத்திரம் தணியாத மற்ற நண்பர்களும் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் நிகழ்விடத்திலேயே ராஜசேகர் உயிரிழந்தார். ராஜசேகர் இறந்துவிட்டதை உறுதி செய்த கொலையாளிகள், அவருடைய உடலில் கல்லை கட்டி அந்தப் பகுதியில் உள்ள மலார் குட்டையில் சடலத்தை வீசிவிட்டு தப்பிச்சென்று விட்டனர்.
மறுநாள் காலையில் போதை தெளிந்த 5 பேரும் நண்பனை கொன்று விட்டோமே என வருந்தியதுடன், அனைவரும் திருச்செங்கோடு காவல்நிலையத்தில் சரணடைந்தனர். அவர்கள் அளித்த தகவலின்பேரில் காவல்துறையினர், மலார் குட்டையில் கிடந்த ராஜசேகரின் சடலத்தை மீட்டனர். சடலத்தை உடற்கூராய்வுக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்நிலையத்தில் சரணடைந்த மலார்குட்டையைச் சேர்ந்த லிங்கப்பன் மகன் விக்னேஷ் (27), கோபால் மகன் பெரியசாமி (25), செல்வம் மகன் தினேஷ்குமார் (25), முருகேசன் மகன் பூவரசன் (23), சண்முகம் மகன் பிரவீன் (23) ஆகிய ஐந்து பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உள்ளூரில் பிள்ளையார் சிலை வைப்பது தொடர்பாக ராஜசேகருக்கும், விக்னேஷ் தரப்புக்கும் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. அதை மனதில் வைத்துக்கொண்டு நண்பன் என்றும் பாராமல் ராஜசேகரை கொலை செய்திருப்பதும், அவர்கள் அனைவருமே சிறு வயது முதலே நண்பர்கள் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை திருச்செங்கோடு நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்பேரில் கொலையாளிகளை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.