வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.
அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞர் உயிரிழந்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதிகாலை ஐந்து மணிக்கு ஆறாவது மலையை அடைந்து நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென தமிழ்ச்செல்வன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி நிலையில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இது தொடர்பான செய்திகள் வெளியாகி இருந்தது.
கடந்த எட்டாம் தேதி சிவராத்திரியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏறினர். கடந்த மாதம் முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி வருகின்றனர். இந்நிலையில் சேலம் வீரபாண்டி பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவரின் 22 வயது மகன் கிரண் தனது நண்பர்களுடன் வெள்ளியங்கிரி மலை ஏற முயற்சித்துள்ளார். அப்பொழுது திடீரென அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.
இது தொடர்பான தகவல் வனத்துறையினருக்கு கிடைத்தது. உடனே டோலி மூலமாக சுமை தூக்கும் தொழிலாளர்கள் இளைஞர் கிரணை கீழே கொண்டு வந்தனர். அங்கிருந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த கிரண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மூச்சுத் திணறல் காரணமாக கிரண் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளியங்கிரி மலை ஏறச் சென்ற மற்றொரு இளைஞர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.