காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் முழுக் கொள்ளவை எட்டின. இதையடுத்து, இந்த அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்துள்ள நிலையில், அணையின் பாதுகாப்பை கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கரையோரம் வசிக்கும் மக்கள், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், அணை நீர் வரும் பகுதிகள் மற்றும் நீர் வெளியேற்றும் பகுதிகளில் யாரும் நின்றுக் கொண்டு செல்பி எடுக்க வேண்டாம், குளிக்க வேண்டாம் என சேலம் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், இன்று (16/07/2022) மாலை 04.00 மணி நிலவரப்படி, மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு வினாடிக்கு 1,13,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 90,000 கனஅடியும், டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 23,000 கனஅடி நீரையும் திறந்து விடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மேட்டூர் அணையின் 16 கண் மதகு பகுதியில் உள்ள உபரிநீர் போக்கி கால்வாயில் செல்பி எடுக்க சென்ற போது மூன்று இளைஞர்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். இது குறித்து தகவலறிந்த மாவட்ட காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கரைபுரண்டோடும் வெள்ளத்துக்கு மத்தியில் சிக்கிய மூன்று இளைஞர்களை, கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.
இளைஞர்களைப் பத்திரமாக மீட்ட தீயணைப்புப்படை மற்றும் காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.