கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சராபாளையம் அருகில் உள்ளது மணிமுத்தாறு அணை. கல்வராயன் மலையில் பெய்யும் மழை நீரைத் தேக்கி வைப்பதற்காக காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பெரிய அணை கோமுகி அணை. தற்போது பெய்த மழையில் டேம் நிரம்பி வழிகிறது. இதைக் காண்பதற்காகச் சுற்றுலா செல்வது போல பல மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் குடும்பத்தினருடன் வந்து பார்த்து மகிழ்ச்சியோடு செல்கிறார்கள்.
அந்தவகையில் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், தளிகைவிடுதி பகுதியைச் சேர்ந்த நடேசன் என்பவரது மகன் ஆனந்தராஜ் (வயது 28). இவர், கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி செய்து வருகிறார். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், தனது நிறுவனத்தில் தன்னுடன் பணிபுரியும் நண்பர்கள் நான்கு பேருடன் மணிமுத்தாறு அணையைப் பார்ப்பதற்குச் சென்றுள்ளனர்.
தண்ணீரைக் கண்ட மகிழ்ச்சியில் நால்வரும் கோமுகி அணைப்பகுதி ஓரம் அமர்ந்து குளித்துள்ளனர். நால்வருக்குமே நீச்சல் தெரியாததால் அப்படி குளித்துக் கொண்டிருந்த போது ஆனந்தராஜ் தண்ணீரில் மூழ்கித் தத்தளித்துள்ளார். மற்ற மூவருக்கும் நீச்சல் தெரியாததால் அவரை காப்பாற்ற முடியவில்லை. ஆனந்தராஜ் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உடனடியாக கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர். கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அவரது குழுவினர் விரைந்து வந்து கோமுகி அணைப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் தேடுதலுக்குப் பிறகு ஆனந்தராஜ் உடலைச் சடலமாக மீட்டுள்ளனர். இதுகுறித்து தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி கல்லூரி மாணவர்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு இறப்பதும், ஏரி, குளம், அணைக்கட்டு போன்ற இடங்களில் உள்ள தண்ணீரில் நீச்சல் தெரியாமல் இளைஞர்களும் சிறுவர்களும் மூழ்கி உயிரிழக்கும் சம்பவம் அவ்வப்போது நடந்து வருவதும் வேதனைக்குரியது என்கிறார்கள் அப்பகுதி சமூக ஆர்வலர்கள்.