Skip to main content

கறிக்கு ஆசைப்பட்டு கம்பி எண்ணும் இளைஞர்கள்

Published on 05/08/2018 | Edited on 05/08/2018

 

j


வேலூர் மாவட்டம், பேராணம்பட்டு – ஆம்பூர் சாலையில் ஆம்பூரை அடுத்த மாச்சம்பட்டு பகுதியில் ரோட்டில் காட்டுப்பன்றி மீது இன்று ஆகஸ்ட் 5ந்தேதி காலை ஏதோ ஒருவாகனம் மோதியதில் காட்டுப்பன்றி இறந்து போய்விட்டது. இறந்துப்போன அந்த காட்டுப்பன்றி சாலையில் கிடந்துள்ளது.


இதுப்பற்றி சிலர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆம்பூரிலிருந்து வனத்துறையினர் வருவதற்குள் சிலர் அந்த காட்டுப்பன்றியை இருசக்கர வாகனத்தில் வைத்து எடுத்துக்கொண்டு சென்றுள்ளனர்.


சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் விபத்து நடந்த இடத்தில் காட்டுப்பன்றி இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சியாகினர். அப்பகுதியை சேர்ந்த சிலரிடம் விசாரித்தபோது, இரண்டு இருசக்கர வாகனத்தில் இறந்த காட்டுப்பன்றியை எடுத்து சென்றதாக தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் போன வழியை காட்டியும் உள்ளனர்.


வனத்துறையினர் தேடிச்சென்றபோது, விபத்து நடந்த இடத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் ஒரு தனியார் நிலத்தில் சிலர் அமர்ந்து காட்டுப்பன்றியை தீயில் சுட்டு அதை பீஸ் போட்டுக்கொண்டு இருந்துள்ளனர். இதைப்பார்த்து வனத்துறையினர் அவர்களை நெருங்கியுள்ளனர். வனத்துறையினர் வருவதை பார்த்து 3 பேர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.


நேரு, விஜயகுமார் என்கிற இருவர் காட்டுப்பன்றியோடு சிக்கினர். அவர்களை ஆம்பூர் வனத்துறை அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்திவருகின்றனர். தப்பி சென்ற 3 பேரை தேடிவருகின்றனர்.


விபத்து நடந்த இடத்தில் இருந்த தடயங்களை அழித்தது, காட்டுப்பன்றியை தூக்கி சென்றது உட்பட பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வாய்ப்புள்ளது என்கிறார்கள் வனத்துறை தரப்பில். திருட்டு கறிக்கு ஆசைப்பட்டு இப்போது கம்பி எண்ணவுள்ளார்கள் அந்த இளைஞர்கள்.
 

சார்ந்த செய்திகள்