நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
ஏற்கெனவே கோடைக்கால வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், தேர்தல் பரப்புரைகள் இன்னும் அனலைக் கூட்டியுள்ளது. பல இடங்களில் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம் நூதனமான முறையில் வாக்கு சேகரிக்கும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது. டீக்கடையில் டீ ஆற்றுவது, பரோட்டா சுடுவது, துணி துவைப்பது போன்ற நூதன முறைகளில் வேட்பாளர்கள் வாக்காளர்களை கவர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கன்னியாகுமரியின் விளவங்கோடு தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளரான ராணி, உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவு பரிமாறியதோடு உணவை ஊட்டி விட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வேட்பாளரின் இந்த நடவடிக்கை, அந்தப் பகுதி வாக்களர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.
இந்நிலையில் ஆரணி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தரணிவேந்தனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான் மயிலம் சுற்றுவட்டார பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த பொதுமக்களுக்கு குச்சி ஐஸ் வாங்கி கொடுத்து வாயில் ஊட்டி நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.