Skip to main content

காங்கிரசுக்கு போட்டியாக களம் காணும் யாதவா மகாசபை ! 

Published on 20/03/2021 | Edited on 20/03/2021

 

Yadava Mahasabha to contest


தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பிடிக்குத் துவங்கியிருக்கிறது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளிலும் சீட் கிடைக்காத அதிப்தியாளர்கள் பல்வேறு தொகுதிகளில் சுயேச்சைகளாக களம் காண்கிறார்கள். அதேபோல, சமூக ரீதியிலான அமைப்புகளும், தங்கள் சமூகத்திற்கு பிரதிநிதித்துவம் அளிக்காததால் பிரதான அரசியல் கட்சிகளை எதிர்த்து தங்களது வேட்பாளர்களை இறக்கியிருக்கிறார்கள்.அந்த வகையில், காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் அக்கட்சி வேட்பாளர்களை எதிர்த்து தங்களது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது அகில இந்திய யாதவ மகாசபை தமிழ்நாடு என்கிற சமூக அமைப்பு.

 

இந்த அமைப்பின் மாநில தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் சமீபத்தில் நடந்த உயர்மட்ட குழுவில், யாதவர் சமூகம் அதிகமாக உள்ள தொகுதிகளில் அச்சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர். அதனை அனைத்து அரசியல் கட்சிகளின் தலைமைக்கும் அது அனுப்பியும் வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், யாதவாவிற்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்படவில்லை என அச்சமூகத் தலைவர்கள் ஆதங்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, தமிழக காங்கிரஸ் கட்சி யாதவர்களுக்கு ஒரு இடத்தில் கூட வாய்ப்பளிக்கவில்லை என அவர்களால் குற்றம்சாட்டப்படுகிறது.

 

இதுகுறித்து பேசும் யாதவா மகாசபை தலைவர்கள், “இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 25 தொகுதிகள் கிடைத்துள்ளது. ஆனால் ஒரு இடம்கூட யாதாவ சமூகத்திற்கு காங்கிரஸ் ஒதுக்கவில்லை. இது எங்கள் சமூகத்தை புறக்கணிப்பது போலாகும். எங்கள் மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதில் எங்கள் சமூகம் மிகவும் உழைத்திருக்கிறது. இந்த உண்மை காங்கிரஸ் தலைவர்களுக்குத் தெரிந்தும் எங்கள் சமூகத்தை சீட் ஒதுக்கப்படாதது அநீதி” என்கிறார்கள்.

 

யாதவா சமூகத்திற்கு சீட் ஒதுக்கப்படாததில் அதிர்ப்தியடைந்த யாதவா மகாசபையினர் மீண்டும் கூடி விவாதித்து, காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் நமது வேட்பாளர்களை நிறுத்துவோம் என முடிவு செய்தனர். அதன்படி, வேளச்சேரியில் குணா யாதவ், சோளிங்கரில் மோசூர் கணேசன், காரைக்குடியில் வெளிமுத்து ராமச்சந்திரன், மேலூரில் எஸ்.கோபாலகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் சுரேஷ், விருத்தாச்சலத்தில் வெங்கடேசன், நாங்குனேரியில் மணிகண்டன், திருவாடணையில் ஜெயபால் அம்பலம், உடுமலைப்பேட்டையில் வினோத்குமார் யாதவ், கடையநல்லூரில் வேலம்மாள் குருசாமி ஆகிய 10 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது அகில இந்திய யாதவா மகாசபை.

சார்ந்த செய்திகள்