புதுக்கோட்டை மாவடம், அறந்தாங்கி ஒன்றியம் ஆவணத்தான்கோட்டை கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுமார் 3.50 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பள்ளி வளாகம், கழிவறைகள் மற்றும் கட்டடங்களைப் பார்வையிட்டார். அப்போது பள்ளி வளாகத்தை வீட்டை போல தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என ஆசிரியர்களை கேட்டுக் கொண்டார். மேலும் 156 மாணவ மாணவியர்கள் படிக்கிற இந்தப் பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லை. ஒரே கட்டடத்தில் அத்தனை மாணவ மாணவிகளும் இடநெருக்கடியில் அமர்ந்து படிக்கிறார்கள். அரசு வழங்குகின்ற சலுகைகளை அரசு அதிகாரிகள் செயல்படுத்தாமல் தயக்கம் காட்டக்கூடாது என வட்டார வளர்ச்சி அலுவலரைச் சாடிய அமைச்சர், கட்டட வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளியில் உங்கள் பிள்ளைகளை படிக்க வைப்பீர்களா என்று கேள்வி எழுப்பியதுடன் உடனடியாக போதிய கட்டட வசதிகளுக்கு பரிந்துரைக்க அதிகாரிகளிடம் உத்தரவிட்டார்.
அமைச்சரின் இந்த செயல் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதே போல இதே வட்டார வளர்ச்சி அலுவலர் ஏற்கனவே பல பள்ளிகளுக்கு கேட்கப்பட்ட பள்ளி கட்டடங்களை வழங்கவில்லை என்றும் ‘நமக்கு நாமே’ திட்டத்தில் பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்திக் கொள்ள விண்ணப்பத்துடன் பொதுமக்களின் பங்களிப்பு தொகையை டி.டி.யாக கொடுத்தும் பல மாதங்களாக அந்த விண்ணப்பம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பப்படாமல் ஒன்றிய அலுவலகத்திலேயே கிடப்பில் உள்ளது. அந்த டி.டி.க்கான காலம் முடிந்து காலாவதி ஆகப்போகிறது என்று வேதனைப்படுகிறார்கள் பொதுமக்களும் ஆசிரியர்களும்.