சேலம் மாவட்ட உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் சிறை நிரப்பும் போராட்டம் ஆட்சியர் அலுவலகம் அருகில் வெள்ளிக்கிழமை (மார்ச் 6) நடந்தது. சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தையொட்டி, பெண்களுக்கு சம உரிமைகளை வழங்க வலியுறுத்தி இன்று ஒரே நாளில், தமிழ்நாடு முழுவதும் இக்குழு சிறை நிரப்பும் போராட்டத்தை முன்னெடுத்தது.
உழைக்கும் பெண்களுக்கு, ஆண்களுக்கு சமமான ஊதியத்தை வழங்க வேண்டும்; பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்; தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்துதலை தடுக்க புகார் கமிட்டி அமைக்க வேண்டும், அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்; அனைவருக்கும் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெண்கள் முழக்கங்களை எழுப்பினர்.
ஒருங்கிணைப்பாளர் வைரமணி தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில், இந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டத் தலைவர் பரமேஸ்வரி, சிஐடியு மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம், செயலாளர் உதயகுமார், துணைத்தலைவர் தியாகராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாகக்கூறி, காவல்துறையினர் பரமேஸ்வரி உள்ளிட்ட 56 பேரை கைது செய்தனர்.