
தர்மபுரி அருகே, மற்றொரு ஆணுடன் முறையற்ற தொடர்பில் இருந்ததை கைவிடுமாறு கூறியும், மனைவி கேட்காததால் அவரை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்துவிட்டதாக கணவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள பாளையம்புதூரைச் சேர்ந்தவர் மயில் என்கிற முருகன் (40). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி காவியா (35 பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன்பு, இண்டூர் அருகே உள்ள கும்பலாப்பாடியில் உள்ள அவருடைய பெற்றோர் வீட்டுக்கு காவியா சென்றுவிட்டார்.
மனைவியை சமாதானம் செய்த முருகன், மாமனார் வீட்டிலேயே சிறிது காலம் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் மார்ச் 24ம் தேதியன்று, அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த முருகன், வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் அவரது மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த காவியா, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த இண்டூர் காவல்நிலைய காவல்துறையினர், முருகனை கைது செய்தனர். காவல்துறை விசாரணையில் முருகன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
வாக்குமூலத்தில் அவர், 'காவியாவுக்கும் எனக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் என்னுடன் வாழப்பிடிக்காமல் இண்டூரில் உள்ள அவருடைய பெற்றோர் வீட்டுக்கு குழந்தைகளை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த டிவி மெக்கானிக் ஒருவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த பிறகுதான் நானும் அவரை சமாதானம் செய்து மாமனார் வீட்டிலேயே வைத்து குடும்பம் நடத்தினேன். ஆனாலும் நான் கூலி வேலைக்குச் சென்ற பிறகு, என் மனைவியும் அந்த டிவி மெக்கானிக்கும் சந்தித்து நெருங்கி பழகி வந்துள்ளனர்.
இதுகுறித்து ஊரார் தப்பாக பேசியதால், அந்த நபருடனான தொடர்பை கைவிடுமாறு காவியாவிடம் கூறினேன். கெஞ்சிப் பார்த்தேன். அவர் கேட்கவில்லை. சம்பவத்தன்று மதியம் சாப்பிடுவதற்கு வீட்டுக்கு வந்தபோது, என் மனைவி யாருடனோ சிரித்து சிரித்து செல்போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தார். அந்த மெக்கானிக்குடன்தான் அவர் பேசிக்கொண்டு இருந்ததாகச் சொன்னார். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதுகுறித்து கேட்கவும் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில் என் மனைவியை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்து விட்டேன்'' என்று தெரிவித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முருகன், தர்மபுரி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக காவியாவுடன் தொடர்பில் இருந்து வந்த டிவி மெக்கானிக்கை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.