அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு செல்லூர் ராஜூ பதிலளித்ததிலிருந்து, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அமைச்சர் ஜெயக்குமார் என ஒவ்வொருவரும் தங்களது கருத்துகளைக் கூறிவருகின்றனர்.
அதேபோல் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதால் இனி தமிழகத்தில் பாஜக தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என கூறியிருந்தார். அன்று மாலையே பெரம்பலூரில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் முருகன் அதிமுக-பாஜக கூட்டணியில்தான் உள்ளது எனக் கூறியிருந்தார்.
இப்படி இருக்க, இந்நிலையில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து விவாதிக்க சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் கூடியுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆலோசனையில் துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் இந்த விவாதத்தில் பங்கேற்றுள்ளனர்.
ஆனால் அதிமுக தரப்பில் அண்மையில் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்ட அதிமுக கட்சி மாவட்டங்கள் குறித்து ஆலோசிக்க இந்த ஆலோசனை கூட்டம் எனவும் கூறப்படுகிறது.