
துணை நடிகையை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும், பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது புகார் எழுந்த நிலையில் இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு போலீசார் காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
தற்போது முன்னாள் அமைச்சர் மணிகண்டனை மதுரைக்கு அழைத்துச் சென்ற அடையாறு தனிப்படை போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.துணை நடிகையின் புகாரில் கைதான அவரிடம் வழக்கு தொடர்பான ஆவணங்களை சேகரித்து வருகின்றனர்.
முன்னதாக அடையாறு அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மணிகண்டனை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. நேற்று நள்ளிரவு மதுரை அழைத்துவரப்பட்ட மணிகண்டன் மதுரை எஸ்.எஸ் காலனி காவல்நிலையத்தில் தங்கவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.
இந்த வழக்கில் முக்கிய ஆவணமாக கருதப்படும் மணிகண்டனின் செல்ஃபோன் மதுரை கே.கே நகரில் உள்ள அவரது வீட்டில் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதனடிப்படையில் செல்ஃபோனில் தான் அந்த துணை நடிகையின் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் இருப்பதாகவும், அதுதான் இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாக இருக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
எனவே அந்த ஆதாரங்களை கைப்பற்றுவதற்காக மணிகண்டனை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். பிறகு அவரது வீட்டிற்கு அவரை அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ள போலீசார், மதுரையில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்திய பிறகு, மதுரையில் எந்தெந்த பகுதிகளுக்கு எல்லாம் அதை துணை நடிகையை அழைத்துச் சென்றார் என்பது தொடர்பான விசாரணை செய்து பதிவு செய்ய இருக்கின்றனர். அதேபோல் மதுரை விசாரணைக்குப் பிறகு ராமநாதபுரம் அழைத்துச் சென்று அவர் விசாரிக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.