நாகப்பட்டினம் அவுரித்திடலில் மூன்றாம் ஆண்டுத் துவக்க விழாவை சமுக நீதி பொதுக்கூட்டமாக நடத்தியிருக்கிறது மனிதநேய ஜனநாயக கட்சி.
பொதுக்கூட்ட மேடைக்கு சமூகநீதி காத்த வீராங்கனை என ஜெயலலிதாவின் பெயரை பொறித்திருந்தனர். அதேபோல் நுழைவு வாயிலுக்கு வி.பி.சிங் பெயரையும், மற்றொரு நுழைவு வாயிலுக்கு நீட் எதிர்ப்பில் உயிர்விட்ட அனிதாவின் பெயரையும், ஆண்கள் இருக்கைகள் பகுதிக்கு தந்தை பெரியார் அரங்கம் என்றும், பெண்கள் அமர்வு பகுதிக்கு அன்னை தெரசாவின் பெயரையும், பத்திரிகையாளர்கள் அமரும் இடத்திற்கு காயிதே மில்லத் பெயரையும் வைத்து கூட்டத்தை டிஜிட்டல் மயமாகியிருந்தனர்.
கட்சிக்கொடியை ஏற்றிவைத்து மூன்றாம் ஆண்டு துவக்கவிழா பொதுக்கூட்டத்தை துவக்கி வைத்தார் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏவுமான தமிமுன் அன்சாரி. அவரோடு தனியரசு எம்.எல்.ஏ., கருணாஸ் எம்.எல்.ஏவும் உடனிருந்தனர்.
ஆண்கள், பெண்கள் என அவுரித்திடலில் கூட்டம் நிரம்பியே இருந்தது. ’அரசியல் கட்சியின் பொதுக்கூட்டமாக இருந்தாலும், மற்ற கட்சி கூட்டங்களைப் போல மதுபோதையில் யாரும் திண்டாடவில்லை என்பதும், கூட்டம் மிக அமைதியாக நடந்தது என்றும் நாகை நகர வர்த்தகர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
காரைக்கால் மார்க் துறைமுகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தமிழக மீனவர்களின் கடல் உரிமைகளை பாதுகாக்க வேண்டும், காவிரி டெல்டா மாவட்டங்களை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும், நீட் தேர்வை இந்தியா முழுவதும் ரத்து செய்ய வேண்டும், 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என 14 தீர்மானங்களை அந்தக் கூட்டத்தில் முன்வைத்தனர்.
எம்.எல்.ஏ தனியரசுவோ, ‘நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் தமிழ் சமூக அரசியலுக்கு சரியாக இருக்குமா என்கிற நிலை ஒருகாலத்தில் பரபரப்பாக பேசப்பட்டது, அதை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கலைஞர் போன்றவர்கள் தகர்த்தெறிந்தனர். மக்கள் நலன் குறித்து திரைப்படங்களிலும், பொதுவெளியிலும் பேசினர். ஆனால், இன்றோ இளமை பருவம் முழுவதும் பணம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, மக்களின் மீது அக்கரையற்றவர்களாக இருந்தவர்கள் வயதானதும் நடிப்புத்தொழிலை விட்டுவிட்டு முதல்வர் ஆகும் கனவோடு அரசியலில் குதிக்கின்றனர். ஜெயலலிதா மறைந்துவிட்டார், கலைஞர் உடல் நலம் பாதிக்கப்பட்டு செயல்பட முடியாத நிலைக்கு போய்விட்டார் என்பதை சரியாக பயன்படுத்த நினைக்கிறார்கள். இவர்களின் அரசியல் எண்ட்டிரியை நினைக்கும் போது கிராமத்து பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. ’அப்பன் எப்ப சாவான் தின்ன எப்ப காளியாகும்னு’ வரும் அது மாதிரி கதையா இவங்க அரசியல் கதை இருக்கு.
தமிழகத்தின் ஜீவாதார பிரச்சினைகளில் கருத்துசொல்லாத வயதான நடிகர்கள். ஒருவர் கட்சியை துவக்கி விட்டார், மற்றொருவர் இதுவரை அரசியல் வரலாறு கண்டிடாத ஆன்மீக அரசியல் என கூறி வருகிறார். அந்த அரசியல் தமிழகத்தில் எடுபடாது.’’ என்றார்.
கருணாஸ் பேசுகையில்,‘’யாரை பற்றி, எந்த கூட்டணிய பத்தி பேசுறாங்களோ இல்லையோ, எங்க மூவர் கூட்டணி பத்தி பேசாத நாளில்லை என்கிற நிலை உருவாகிடுச்சி. நான் சாதிவெறியன் என்கிறார்கள், அது உண்மை அல்ல. ஆனால், சமுதாய உணர்வாளன். சமுதாயம் சார்ந்து நான் இருந்ததால் எனக்கு சட்டமன்றத்தில் இடம் கிடைத்தது. அதை மறைக்க வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. சாதி ஒன்றுதான் தமிழர்களை இணைக்கத் தடையாக இருக்குமானால் அதை உடைக்க நான் தயார். ஆனால், அதுமுடியுமா என்றால் நிச்சயம் முடியாது. அன்சாரி, தனியரசு போல் நான் பொது விஷயங்களிலோ, போராட்டங்களிலோ கலந்துகிட்டது இல்ல. எனது சொந்த வாழ்க்கையே போராட்டமாக இருந்தது. நான் நடிகனாக இருந்தாலும் சிதம்பரத்திலும் திருவையாற்றிலும் பஜனை பாடிய, நளினம் ஆடிய நடிகன் அல்ல. இந்த மண்ணின் கலைஞன். இந்த மன்னின் கலையான பறையை காலில் சலங்கை கட்டிக்கொண்டு வீதி, வீதியாக ஆடியவன். எனக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் உண்டு.
கூவத்தூர் விவகாரத்தில் என்னை துணை நடிகைகளோடு பிணைத்து பேசினார்கள். நான் விமர்சனத்தை பெரும் பொருட்டாக கொள்ளாதவன். ஆனால், கூவத்தூரில் துணை நடிகைகளோடு என்னை இணைத்துப் பேசியது, என்னுடைய இரண்டு பிள்ளைகளின் மனநிலையை பாதிக்க செய்ததால் நானும் பாதிப்படைந்தேன். அதுகுறித்து நேரம் வரும்போது வெளிப்படையாக பேசுவேன்’’ என தனக்கே உரிய சினிமா பாணியில் பேசி முடித்தார்.
கடைசியாக பேசிய நாகை எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி, ’’தற்போது சமுகநீதிக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. தமிழக மீனவர்கள் கடலுக்கு போய் முழுமையாக திரும்பி வர முடியாத நிலை உருவாகியுள்ளது. சிங்களனுக்கு மத்திய அரசு துணைப்போய் கொண்டிருக்கிறது. அதேபோல பசுமையான டெல்டா பகுதியை பாலைவனமாக்க வேண்டும் என திட்டமிட்டே மீத்தேன், ஹைட்ரோ கார்பன் என பல திட்டங்களை புகுத்தி வருகிறது. காவிரி பிரச்சினையில் இறுதி தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்தும் அவர்கள் மேலாண்மை வாரியம் அமைப்பது கடினம் என கூறுகிறார்கள். நாங்கள் மூவரும் மூன்று கட்சிகளாக இருந்தாலும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தமிழக நலன்சார்ந்த விஷயத்தில் எப்போதும் ஒன்றாக குரல் கொடுப்போம்’’ என்றார்.