Skip to main content

கோடி, கோடியாக செலவு செய்தும் விரிசல் விடும் வெலிங்டன் ஏரிக்கரை!

Published on 15/06/2020 | Edited on 15/06/2020
Wellington Lake




கடலூர் மாவட்டம், திட்டக்குடியை அடுத்துள்ளது கீழ்ச் செருவாய். இந்த ஊரை ஒட்டியுள்ளது வெலிங்டன் நீர்த்தேக்கம். 1922ஆம் ஆண்டு இப்பகுதியில் நிர்வாகம் செய்து வந்த வெலிங்டன் பிரபு என்ற ஆங்கிலேயர் இந்த ஏரியை கட்டி முடித்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளார். நூற்றாண்டை நெருங்கும் இந்த ஏரிக்கு இப்பகுதி மக்கள் வைத்துள்ள பெயர் எமன் ஏரி. இதன் பரப்பளவு 16.6 சதுர கிலோமீட்டர் சுற்றளவு கொண்டது. இந்த நீர்த்தேக்கத்தில் உச்சகட்ட நீர்பிடிப்பு அளவு சுமார் 29 அடி. இந்த ஏரி மூலம் 67 கிராமங்களை உள்ளடக்கிய 28,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது. 

ஆனால் கடந்த பல ஆண்டுகளாகவே போதிய அளவு மழை இல்லாததால் ஏரியில் தண்ணீர் நிரம்பவில்லை. அப்படியே சில ஆண்டுகள் மழை பெய்து தண்ணீர் வந்தபோதும் ஏரியில் நீர் பிடித்து தேக்க முடியவில்லை. காரணம் இதன் ஏரிகரை அவ்வப்போது விரிசல் விட்டப்படியே உள்ளது.

2009ஆம் ஆண்டு இதேபோன்று கரை விரிசல் அடைந்தது. அப்போது ரூபாய் 29 கோடியே 21 லட்சம் அரசு நிதி ஒதுக்கீடு செய்து கரை சீரமைக்கப்பட்டது. அதையடுத்து 2017 ஆம் ஆண்டு மீண்டும் கரையில் விரிசல் ஏற்பட்டது. அதை சரி செய்வதற்காக ரூபாய் 6 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீரமைப்பு பணியை மேற்கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக 2018 ஆம் ஆண்டு ஒரு கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து கரை பலப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது கரையின்மேல் பகுதியில் போடப்பட்டுள்ள தார்சாலை சில இடங்களில் விரிசல் விட்டு வெடிப்பு ஏற்பட்டு உள்வாங்கிய நிலையில் காணப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கோவிந்தராஜன் நீர்தேக்கத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்து சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.
 

Wellington Lake



உதவி பொறியாளர்கள் சோழராஜா, பாஸ்கர் ஆகியோர் பொக்லைன் எந்திரம் மூலம் கரையில் போடப்பட்ட தார் சாலையில் ஏற்ப்பட்ட வெடிப்பு பகுதியில் உள்வாங்கிய பகுதிகளை சீரமைப்பு செய்தனர். இது சாதாரண வெடிப்புதான், கரை எதுவும் ஆகாது. விவசாயிகள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் விவசாயிகள் தரப்பில் கடந்த பல ஆண்டுகளாகவே கரை ஆங்காங்கே விரிசல் விடுவதும் ஏரியில் உள்பக்கம் வெளிப்பக்கம் கரை சரிந்து வருவதுமாக உள்ளது. இதை சரி செய்யவதாக கூறி பொதுப்பணித்துறை அதிகாரிகள், அரசு ஒதுக்கும் நிதியில் அவ்வப்போது கிராவல் மண்ணை போட்டு சரி செய்கிறார்கள். அப்படி செய்தும் மீண்டும் மீண்டும் கரை சரிவு ஏற்பட்ட வண்ணமே உள்ளது. 

Wellington Lake


 

2009 ஆம் ஆண்டு கரை சரிவு ஏற்பட்டபோது அப்போதைய  தொகுதி எம்எல்ஏவாக இருந்த செல்வபெருந்தகை, அப்போதைய முதல்வர் கலைஞரிடம் எடுத்துக்கூறி நிதி ஒதுக்கீடு பெற்று கொடுத்தார். அதன்மூலம் சுமார் 500 மீட்டர் தூரம் கரையை செப்பனிட்டனர். அந்த 500 மீட்டர் கரைபலமாக உள்ளது. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து உள்ள பழைய கரையையும் அதே போன்று செப்பனிட்டு இருந்தால் தொடர்ந்து கரை சரிவு ஏற்பட்டிருக்காது. 

ஏரி உருவாக்கப்பட்டு 100 ஆண்டுகள் நெருங்கும் நிலையில் அதன் கரைகள் பலமிழந்து இருக்கலாம். எனவே தரமாக உள்ள கரைப்பகுதியை தவிர்த்து மீதி உள்ள கரை பகுதியை முற்றிலும் சீர்படுத்த வேண்டும். அப்போதுதான் ஏரிக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். மழைக்காலங்களில் வரும் வெள்ள நீரை அதிகளவு தேக்கிவைத்து பாசனத்திற்கு பயன்படுத்த முடியும். கரையை சீர் படுத்துகிறோம் என்று அவ்வப்போது பல கோடிகள் செலவு செய்யப்படுகிறது. அவை எல்லாமே வீண் செலவாக உள்ளது. 

பல ஆண்டுகளாகவே இந்த ஏரிப்பாசனம் முறையாக நடைபெறாததால் இதனை நம்பியுள்ள 67 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு கிடைக்காமல் கேரளா, சென்னை, பெங்களூர், மும்பை என பல்வேறு மாநிலங்களுக்கு பிழைப்பு தேடி சென்றுள்ளனர். திட்டக்குடி சட்டமன்றத் தொகுதியில் சுமார் 50 சதவீத வாக்காளர்கள் இந்த கிராமங்களில் வாழ்கிறார்கள். எனவே தமிழக முதல்வர் ஏரிக்கரையை சீர் படுத்துவதற்கு முன்பு புவியியல் வல்லுனர்கள் கொண்ட சிறப்பு குழுவை அமைத்து ஆய்வு செய்து கரையை பலப்படுத்த வேண்டும். இன்னும் இரண்டு ஆண்டுகளில் 100ம் ஆண்டு விழா கொண்டாட உள்ள இந்த வெலிங்டன் ஏரி, விவசாயிகளின் வாழ்வை வளப்படுத்தும் வகையில் ஏரியையும் அதன் கரையையும் சீர்படுத்தி பலப்படுத்த வேண்டும் என்கிறார்கள் இதையே வாழ்வாதாரமாக நம்பியுள்ள விவசாயிகள்.

 

சார்ந்த செய்திகள்