
சிதம்பரத்திலிருந்து நஞ்ச மகத்து வாழ்க்கை கிராமத்திற்கு தினம் தோறும் கிராமப்புற பேருந்து இயங்கி வந்தது. இந்த பேருந்து சிதம்பரத்திலிருந்து வண்டிகேட், மண்டபம், பெரிய மதகு, குண்டு மேடு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களின் வழியாக நஞ்ச மகத்து வாழ்க்கை கிராமத்திற்கு இயக்கப்பட்டு வந்த நிலையில், இந்த பேருந்து கடந்த 4 மாத காலமாக இயங்கவில்லை. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் விவசாயிகள் கூலி தொழிலாளர்கள், நகர்ப்புறத்தில் வணிக நிறுவனங்களில் பணியாற்றும் கூலி தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டவர்கள் நகர்ப்புறத்திற்கு வந்து செல்வதற்கு சிரமம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் கடந்த 4 மாதத்திற்கு முன்பு சிதம்பரம் போக்குவரத்து பணிமனையில் உள்ள அதிகாரிகளுக்கு மனு அளித்து நடவடிக்கை இல்லாததால், போராட்டத்தை அறிவித்தனர். இதனையொட்டி அப்போது மாற்று வழித்தடத்தில் சென்ற ஒரு பேருந்து தற்காலிகமாக சம்பந்தப்பட்ட நஞ்சமகத்து வாழ்க்கை கிராமத்திற்கு அனுப்பி வைத்தனர். அந்த பேருந்து 10 நாட்கள் மட்டுமே இயங்கிய நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனையொட்டி பலமுறை போக்குவரத்து அலுவலர்களுக்கு நகரப் பேருந்து இயக்க கோரிக்கை விடுத்து மனு அளித்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்காததால், செவ்வாய்க்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் ஆழ்வார் தலைமையில் மாவட்ட குழு உறுப்பினர் வாஞ்சிநாதன் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் புத்தகப் பையுடன், கிராம மக்கள் என 30-க்கும் மேற்பட்டவர்கள் சிதம்பரத்தில் உள்ள விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து பணிமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு கிராமத்திற்கு பேருந்தை தடையில்லாமல் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி பணிமனை மேலாளர் வசந்தராஜாவிடம் மனு அளிக்க சென்றனர். அப்போது மேலாளர் மனு கொடுக்க வந்தவர்களிடம் சம்பந்தப்பட்ட ஊருக்கு கடந்த 4 மாதமாக நகர பேருந்து இயக்கப்படுகிறது என்றும், அதற்கான ரெக்கார்டு தங்களிடம் உள்ளது என்றும் சொன்னதாக சொல்லப்படுகிறது. இதனால், அங்கு பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைக் கேட்டு, ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் போக்குவரத்து பணிமனை முன்பு கீரப்பாளையம் - சிதம்பரம் நெடுஞ்சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் 5 நிமிடத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து சிதம்பரம் காவல் ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் தாலுகா காவல் உதவி ஆய்வாளர் முருகன் சம்பவ இடத்திற்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சம்பந்தப்பட்ட பணிமனை மேலாளரிடம் மனு கொடுக்க ஏற்பாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து இனிமேல் எந்த தடையும் இல்லாமல் 24 ஆம் தேதி புதன்கிழமை முதல் பேருந்து இயக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர். மேலும் அறிவித்தபடி பேருந்து இயக்கவில்லை என்றால் அப்பகுதியில் உள்ள அனைத்து கிராம மக்களையும் ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டம் போக்குவரத்து பணிமனை முன்பு நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.