Skip to main content

“அவர் எப்படி முதல்வர் ஆனார் என்று நமக்குத் தெரியும்!” - உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

Published on 08/02/2021 | Edited on 08/02/2021

 

"We know how he became chief minister" - Udayanithistalin

 

கரூர் மாவட்டத்திற்கு "விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்" நிகழ்ச்சிக்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வந்துள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், காலை நேரத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின், செல்லும் வழிகளில் விவசாயிகளை நேரடியாகச் சந்தித்துக் குறைகளைக் கேட்டறிந்தார்.

 

கரூர் தொகுதியில் மாலை பிரச்சாரம் மேற்கொள்ள கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா மற்றும் தாந்தோணிமலை பகுதிகளுக்கு வருகைதந்த அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து ராயனூரில் நடைபெற்ற இளைஞரணிக் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய அவர், “முக்கியமான நேரத்தில் இளைஞரணிக் கூட்டம், இன்னும் ஒரு சில மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் வர இருக்கிறது. நிச்சயமாக கரூர் மாவட்டத்தில் 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் 50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற பாடுபட வேண்டும். கடந்தமுறை அரவக்குறிச்சி சட்டமன்றத் தேர்தலில் 40 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தீர்கள். நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றிபெற வைத்து, இந்திய அளவில் 3வது பெரிய கட்சியாக அங்கீகாரம் கொடுத்தீர்கள். 2 மாதத்தில் நீங்கள் நேரடியாக மக்களிடம் பிரச்சாரம் செய்யவேண்டும். 

 

மோடி 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் நாடாளுமன்ற வளாகம் கட்டுகிறார். சொகுசு விமானம் வாங்குகிறார். அவை அனைத்தும் மக்களுடைய வரிப்பணம். முதல்வர் படிப்படியாக வளர்ந்து முதலமைச்சர் ஆனதாகச் சொன்னார். அவர் எப்படி முதல்வர் ஆனார் என்று நமக்குத் தெரியும். அதைப் பற்றி பேசியதால், என்மீது 4 வழக்குப் போட்டு இருக்கிறார்கள். மன்னிப்பு கேட்கச் சொன்னார்கள். ஆனால், மன்னிப்பு கேட்க மாட்டேன், அந்தம்மா காலை பிடித்துத் தான் முதலமைச்சர் ஆனார். ஆனால், தற்போது அந்தம்மா காலையும் கவிழ்த்து விட்டார்கள்.

 

"We know how he became chief minister" - Udayanithistalin

 

மீன் வளத்துறை அமைச்சர், மீன் வளத்துறையைத் தவிர மற்ற எல்லாத்துக்கும் கருத்துச் சொல்லுவார். சசிகலா குறித்து கருத்து கேட்டபோது சொல்ல மறுக்கிறார். சென்னையில் ஜெயலலிதா சமாதிக்கு வந்தவர்கள் அனைவரும் கலைஞர் சமாதியைப் பார்த்து விட்டுச் சென்றனர். என்ன பேசுவது என்று தெரியாமல் பேசுகிறார்கள் மங்குனி அமைச்சர்கள். விஜயபாஸ்கரை பாமாயில் பாஸ்கர் என மக்கள் கூப்பிடுகிறார்கள். அவர் வகிக்கும் துறையில் கோடிக் கணக்கில் ஊழல்செய்துள்ளார். இரண்டரை வருசமா இந்த அமைச்சர்கள் எங்கு பார்த்தாலும் ஊழல் செய்துள்ளனர். ஊழல் குற்றச்சாட்டு ஆளுநரிடம் புகாராகக் கொடுக்கப்பட்டுள்ளது. 

 

இன்னும் 2 மாதம் முக்கியமான நாட்கள். பல்வேறு பகுதிக்குச் செல்லும் போது பொதுமக்கள் நல்ல வரவேற்பு அளிக்கிறார்கள். இந்தியாவிலேயே இளைஞரணி ஆரம்பித்தது நம் கட்சிதான். கரூர் மாவட்டத்தில் 4 சட்டமன்றத் தொகுதியில் 14 ஆயிரம் நிர்வாகிகள் பதவி போட்டுக் கொடுத்து இருக்கிறோம். விரைவில் முரசொலியில் பெயர் பட்டியல் வெளிவரும். மாநிலத்தின் அனைத்து உரிமைகளையும் விட்டுக் கொடுத்துததுடன், அவற்றை மோடியிடம் அடமானம் வைத்துவிட்டார்கள். 

 

55 தொகுதியில் பிரச்சாரம் பன்னிட்டேன், 234 தொகுதியிலும் வெற்றிபெறுவது உறுதி. தொடர்ந்து சி.எஸ்.ஐ மைதானத்தில் நடைபெற்ற தகவல் தொழில்நுட்ப அணி கூட்டத்தில் பேசிய அவர், ஐடி விங் கரோனோ காலகட்டத்தில் நன்றாகச் செயல்பட்டது. இணையத்தில் சிறப்பாகச் செயல்பட ஐ.டி விங்க் உதவியாக இருக்கிறது. அதிமுக, பா.ஜக சார்பில் போடப்படும் அனைத்துப் பதிவுகளுக்கும் உடனடியாகப் பதிலடி கொடுக்க வேண்டும். 2 மாதத்திற்கு தூக்கம் பாராமல் உழைத்து ஆட்சியில் அமர வைக்க உழைக்க வேண்டும். திமுக கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றிபெற பாடுபட வேண்டும். 

 

பாஜக மீதும், அதிமுக மீதும் கடுமையான அதிருப்தியில் மக்கள் இருக்கிறார்கள். நீட் தேர்வில் இருந்து ரத்து வாங்கித் தருவீர்களா என்று மாணவிகள் கேட்டார்கள். தலைவர் கண்டிப்பாக ரத்து செய்துகாட்டுவார். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சி.பி.ஐ விசாரணை கேட்டது நம் தலைவர். அதை மூடி மறைக்கப் பார்த்தார்கள். தற்போது அதிமுக பொறுப்பாளர்களைக் கைதுசெய்து இருக்கிறார்கள். அடுத்த முறை அதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை மோடியிடம் விற்றுவிடுவார்கள். 2 மாதத்தில் திமுக ஆட்சி அமைக்கும், தலைவர் முதல்வர் ஆவார்" என்றார்.

 


சார்ந்த செய்திகள்