என்.எல்.சி. நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமடைந்து வருகிறது. என்.எல்.சி. நிறுவனம் உரிய இழப்பீடு வழங்காமல் நிலம் கையகப்படுத்தும் பணியைத் தொடங்கியுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். நிலம் கையகப்படுத்தும் போது வழங்கப்பட்ட இழப்பீட்டில் ஏராளமான குளறுபடிகள் நடந்துள்ளதாகவும், அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் நெற்பயிர்கள் அழிக்கப்பட்டு வருவதாகவும் விவசாயிகள் தெரிவித்திருந்தனர்.
தொடர்ந்து அண்மையில் பாமக சார்பில் நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்தை முற்றுகையிட்டு நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறை வெடித்தது. தடியடி மூலம் போலீசார் கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்நிலையில் என்எல்சி நிறுவனம் விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளது. இது தொடர்பாக என்.எல்.சி தலைமை மேலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'நெய்வேலியில் உள்ள பரவனாற்றை திசை திருப்ப வேண்டிய அவசியம் இப்போது ஏன்? என்எல்சி சுரங்கம்-2 பகுதியில் உள்ள கிராமங்களிலிருந்து வரும் மழைநீரை பரவனாறு கையாளுகிறது. பருவமழை காலங்களில் மழை நீரின் அளவு ஆற்றின் கையாளும் திறனைவிட அதிகமாக உள்ளதால் வெள்ளம் ஏற்படுகிறது. சுரங்கம் மற்றும் சுற்றுப்பகுதி மக்களின் பாதுகாப்புக்காக பரனலாறு கால்வாய் பணி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. பருவமழையை கருத்தில்கொண்டு கொண்டு பரவனாற்றில் நிரந்தர பாதையை முடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உரிய பயிர் இழப்பீடு வழங்க என்.எல்.சி நிறுவனம் முன் வந்துள்ளது. பயிர் இழப்பீடு வழங்க தனி நபர் பெயரில் மாவட்ட நிர்வாகத்திடம் ஏற்கனவே காசோலைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.