மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கட்சி துவங்கிய பின்பு முதன்முதலாக கொங்கு மண்டலமான ஈரோடு மாவட்டத்தில் இன்றும், நாளையும் 8 தொகுதிகளில் சுற்று பயணம் மேற்கொள்கிறார்.
இதற்காக இன்று மதியம் சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்த கமல்ஹாசனுக்கு, அவரது கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்ததனர். இதனை தொடர்ந்து அவினாசி வந்த கமல்ஹாசன் மாலை 3.45க்கு ஈரோடு அருகே உள்ள மாமரத்துப்பாளையம் என்ற இடத்தில் இயங்கி வருகிற சக்தி மசாலா நிறுவனத்தின் மாற்றுத்திறனாளிகள் பள்ளிக்கு வந்தார்.
அங்கு உள்ள குழந்தைகளோடு அளவளாவிய கமல்ஹாசன், குழந்தைகளிடம் பெயர், தந்தை பெயர் உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார். அதில் ஒரு பெண் குழந்தை, கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடித்த மூன்றாம் பிறை படத்தில் பிரபலாமான கண்ணே கலை மானே என்ற பாடலை இசையுடன் பாடினார்.அதில் மிகவும் நெகிழ்ந்து போனார் கமல்ஹாசன்.
தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான தையல் வகுப்பை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வுகளை தொடர்ந்து மாலை 4.30க்கு பெருந்துரையில், மாலை 6 மணிக்கும் ஈரோட்டிலும் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார்.
பின்னர் இரவு ஈரோட்டில் தங்கும் கமல் நாளை 11ந் தேதி காலை 8.30க்கே மொடக்குறிச்சி சென்று கொடியேற்றி மக்களை சந்திக்கிறார். அடுத்து பத்திரிகையாளர்கள் சந்திப்பும் அதனை தொடர்ந்து கோபி, சத்தியமங்கலம், பவானி, அந்தியூர் என தொடர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.