Skip to main content

விருத்தாசலம் கூட்டுறவு வங்கி முறைகேடு! இயக்குனர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையால் பரபரப்பு!

Published on 08/08/2020 | Edited on 08/08/2020

 

Vriddhachalam Co-operative Bank.. Excitement over investigation into directors!

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தென்கோட்டை விதியிலுள்ள நகர கூட்டுறவு வங்கியில 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு பதினொரு இயக்குனர்கள் தேர்வு செய்யப்பட்டு தற்போது வங்கியின் கூட்டுறவு சங்கத் தலைவராக பாலசுப்பிரமணியன் என்பவர் பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளின் துணைப் பதிவாளர் சண்முகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கியின் பொதுமேலாளர் மற்றும் இயக்குனர்கள் உள்ளிட்ட 13 பேருக்கு நோட்டீஸ் வினியோகித்து இருந்தார். அதில் 'நகர கூட்டுறவு வங்கி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் உறவினர்களுக்கு வங்கியின் விதிமுறைகளை மீறி கடன் வழங்கப்பட்டுள்ளது. 

இதனால் ரிசர்வ் வங்கி நகர கூட்டுறவு வங்கிக்கு 2 லட்சம்  அபராதம் விதித்தது. முறையற்ற வகையில் பணியாளர்களை நியமனம் செய்தது, தவணை தவறிய கடன்களின் உண்மைத்தன்மை ஆகியவற்றால் வங்கிக்கு 11 லட்சத்து 2 ஆயிரத்து 30 ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதால் இந்த முறைகேடு சம்பந்தமாக 7ஆம் தேதி (நேற்று) விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் அமைந்துள்ள கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற உள்ளது. அந்த விசாரணையில் நேரில் ஆஜராக வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் நேற்று கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் 13 பேரில் 11 பேர் ஆஜரானார்கள். 11 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 'வங்கியின் வளர்ச்சிக்காக தீர்மானம் நிறைவேற்றியது மட்டுமே எங்களது பணி ஆகும். வங்கி நிதி இழப்புக்கு நாங்கள் பொறுப்பாக முடியாது' எனத் தெரிவித்தனர்.

தொடர்ந்து வங்கியின் நிதி இழப்பு தண்ட வசூல் செய்வது சம்பந்தமாக துணைப் பதிவாளர் அலுவலக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கியில் நடந்த முறைகேடு சம்பந்தமாக நேற்று நடைபெற்ற இந்த விசாரணை விருத்தாசலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்