Skip to main content

காத்திருந்த தொண்டர்கள்! ஸ்டார் ஹோட்டலில் அண்ணாமலை!  

Published on 20/05/2023 | Edited on 20/05/2023

 

தமிழகத்தில் கள்ளச்சாராய மரணங்கள் விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து இன்று அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது தமிழக பாஜக. பாஜகவின் 7 கட்சி மாவட்டங்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தின. 

 

சென்னையில் மதியம் 3 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி தரப்பட்டிருந்தது. இதனை அண்ணாமலையிடம் தெரிவித்தனர்.  இந்த நிலையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் மதியம் 3 மணிக்கு ஆர்ப்பாட்டத்துக்கு வந்துவிட்டனர். அண்ணாமலை வரவில்லை. இதனால் ஆர்ப்பாட்டம் தொடங்கப்படாமல் இருந்தது. அண்ணாமலையை தொடர்புகொண்டபடி இருந்தனர். ஒரு அழைப்பையும் அவர் அட்டெண்ட் பண்ணவில்லை. இந்த நிலையில், சென்னை கோட்டப் பொறுப்பாளர் கரு. நாகராஜன், அண்ணாமலையை தொடர்புகொள்ள அவரது அழைப்பை மட்டும் அட்டெண்ட் பண்ணினார் அண்ணாமலை. அப்போது, "கூட்டம் வந்ததும் சொல்லுங்கள். வருகிறேன்" எனச் சொல்லி தொடர்பைத் துண்டித்துக்கொண்டார். 

 

இதனையடுத்து, ஆர்ப்பாட்டத்துக்கு வராமல் அண்ணாமலை எங்கே போனார்? என்று நிர்வாகிகள் தேடியபோது, சென்னை அடையாறு கேட்டில் உள்ள 5 நட்சத்திர கிரவுன் ப்ளாசா ஹோட்டலில் ஹாயாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அதனை அறிந்து நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர். 4 மணியாகியும் அவர் ஹோட்டலிலிருந்து கிளம்பவில்லை. ஹோட்டலில் ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதை  கேள்விப்பட்ட தொண்டர்கள், “நாமெல்லாம் வேகாத வெய்யிலில் வெந்து கொண்டிருக்கிறோம். இவர் ஸ்டார் ஹோட்டலில் ஹாயாக இருப்பாரா?”  என்று கோபப்பட்டனர். ஸ்டார் ஹோட்டலில் அண்ணாமலை சாப்பிட, தன்னுடன் வந்த பாதுகாப்பு போலீசாரை வெளியே போய் சாப்பிட்டு வாருங்கள் என அனுப்பி வைத்தார். 

 

இதற்கிடையே நேரம் ஆக ஆக ஆர்ப்பாட்டம் தொடங்கப்படாமல் இருந்ததால், கூட்டத்தில் சலசலப்பும் எரிச்சலும் ஏற்பட்டது. இதனை அண்ணாமலையிடம் கரு. நாகராஜன் சொல்ல, “கூட்டம் வரலை. வெறும் 200, 300 பேரை வெச்சிக்கிட்டு என்னத்த ஆர்ப்பாட்டம் நடத்த? என் தலைமையில் நடக்கிற ஆர்ப்பாட்டத்தில் குறைந்தது 2000 பேராவது இருக்க வேண்டாமா? என்னத்த ஆர்கனைஸ் பண்றீங்கன்னு தெரியலை” என்று கோபப்பட்டார். இந்த நிலையில், 5 மணியாகிவிட்டது. இனியும் நாம் ஆர்ப்பாட்டத்துக்கு போகாமல் இருந்தால் நன்றாக இருக்காது என்ற முடிவுக்கு வந்து, ஹோட்டலில் இருந்து 5 மணிக்கு கிளம்பிச் சென்றார். அவர் வந்ததும் ஆர்ப்பாட்டம் தொடங்கியது.

 

அண்ணாமலை ஸ்டார் ஹோட்டலில் ஹாயாக இருக்க, தொண்டர்களோ 2 மணி நேரம் வெய்யிலில் காத்துக் கிடந்தனர். அண்ணாமலையின் இந்த செயல் பாஜக தொண்டர்களை எரிச்சலடைய வைத்தது.

 

 

சார்ந்த செய்திகள்