“நாளைக்கு எந்த ஏரியாவுக்கு வர்றாராம் எம்.எல்.ஏ.?”
“அதுவந்து.. வெங்கடாசலபுரம்.. அப்புறம் சின்னகாமன்பட்டி.. அப்படியே மேட்டமலை.. சிந்தப்பள்ளின்னு ஒரு ரவுண்ட் அடிக்கிறாரு..”
“ஏம்ப்பா.. கரோனா பீரியட்ல சும்மா இருக்கலாம்ல.. இப்படியா ஒரு நாள் விடாம ப்ரோக்ராம் அட்டென்ட் பண்ணிட்டே இருக்கிறது?”
“அட நீ ஒண்ணு.. கரோனா பிரச்சனை ஆரம்பிச்சதுல இருந்து.. கடந்த 90 நாள்ல 78 நாள், காலுல சக்கரத்த கட்டிட்டு சுத்திக்கிட்டேதான் இருக்காரு.. எனக்குத் தெரிஞ்சு, தமிழ்நாட்டுல எந்த எம்.எல்.ஏ.வும் இவரு மாதிரியில்ல..”
சாத்தூரில், டீ கடை ஒன்றில், ஆளும்கட்சி நிர்வாகிகள் இருவர், “ரொம்ப நல்லவரு.. வல்லவரு..” என, அத்தொகுதியின் எம்.எல்.ஏ., எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் குறித்து ‘ஆஹா.. ஓஹோ.. ’ரேஞ்சுக்கு பேசினார்கள்.
மேலும் அவர்கள் “அதுக்காக இப்படியா? தொகுதி விசிட்ல, பத்து பதினஞ்சு பேரு ‘நாங்கள்லாம் ஃப்ரண்ட்ஸ்’ன்னு சொல்லிட்டு எம்.எல்.ஏ.கிட்ட ‘அண்ணே.. ஊருக்குள்ள.. அதுவும் வீட்டுக்குள்ளயே இருந்து ரொம்ப போரடிச்சிருச்சு.. இந்த ஊரைவிட்டு தள்ளிப்போயி.. கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாம்னு பார்த்தா.. முடியல.’ என்று இதையே ஒரு கோரிக்கையாக வைக்க, உடனே எம்.எல்.ஏ. ‘அதுக்கென்ன.. நீங்க என் தொகுதி மக்களாச்சே.. பக்கத்து ஊருல எனக்கு பம்புசெட் தோட்டம் இருக்கு.. கறி விருந்தே வைக்கிறேன்.. நல்லா சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க.. ஆனா ஒண்ணு.. இந்த கரோனா.. சமூக இடைவெளி.. இதையெல்லாம் ஸ்ட்ரிக்டா கடைப்பிடிக்கணும்.. அப்புறம் உங்கள்ல யாருக்கும் கரோனா இல்லாம இருக்கணும். இது ரொம்ப முக்கியம்’னு சொல்லி, வேன் பிடிச்சு அனுப்பி வச்சிருக்காரு. இதெல்லாம் ரொம்ப ஓவர்ல..” என்று சிரித்தனர்.
இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற ராஜவர்மன், சாத்தூர் எம்.எல்.ஏ. ஆகி, ஒரு வருடம்தான் ஆகிறது. அடுத்த ஆண்டு வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், இதே தொகுதியில் தனக்கு சீட் கிடைத்து, மீண்டும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆகிவிட வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருக்கிறார். அதனால்தான், கரோனா காலக்கட்டத்தில், தொகுதி மக்கள் மீது இத்தனை பாசம் காட்டி வருகிறார். ‘உண்மையிலேயே எம்.எல்.ஏ. நல்லவரா?’என்ற கேள்விக்கு, ‘நாலு பேருக்கு நல்லது செஞ்சா எதுவுமே தப்பு இல்ல..’என, 'நாயகன்' திரைப்படத்தில் கமல் பேசும் வசனம், ராஜவர்மனுக்கு மிகவும் பொருந்திப் போகிறது.
எம்.எல்.ஏ. ஆன பிறகு அப்படியென்ன நல்லது பண்ணிவிட்டார்?
சாத்தூர் அருகிலுள்ள ஸ்ரீரங்கபுரம், நடுச்சூரங்குடி, கோட்டைப்பட்டி, வெம்பக்கோட்டை ஆகிய கிராமங்களில் சூறைக்காற்றுடன் வீசிய கனமழையால், மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்து, 50- க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. காற்றில் பறந்த ஓடுகள் விழுந்து பலர் காயமடைந்தனர். உடனே, அந்தக் கிராமங்களுக்கு விரைந்தார். தன் சொந்த செலவில் நிவாரணம் வழங்கினார்.
சேலம் மாவட்டத்திலிருந்து, சாத்தூர்- படந்தாலில் உள்ள குலதெய்வ வழிபாட்டிற்காக 16 பேர் வந்திருந்தனர். ஊரடங்கினால், சொந்த ஊருக்கு அவர்களால் திரும்ப முடியவில்லை. இதைக் கேள்விப்பட்ட எம்.எல்.ஏ., அவர்கள் தங்குவதற்கு இடம், தேவையான உணவுப் பொருட்களை வழங்கி, 47 நாட்கள் கரிசனத்துடன் கவனித்து, மே 12- ஆம் தேதி, அவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி, தனது செலவில் வேன் ஏற்பாடு செய்து, சேலத்திற்கு அனுப்பி வைத்தார்.
தொகுதியில் நல்லது கெட்டதுகளில் ‘டாண்’ என்று ஆஜராகிவிடுவார். தொகுதி முழுவதும், முகக்கவசம் கொடுத்தது, கிருமிநாசினி தெளித்தது, கபசுர குடிநீர் வழங்கியதெல்லாம் ரெகுலர்தான். அதுபோக, ‘எந்தெந்த ஏரியா விட்டுப்போச்சு? யார் யாருக்கெல்லாம் நிவாரணம் தரல?’ என்று திரும்பத் திரும்பக் கேட்டு, தொகுதி முழுவதும் அரிசி, பருப்பு, மளிகைப் பொருட்கள் அடங்கிய ரூ.1,500 பெறுமான தொகுப்பினை வழங்கியிருக்கிறார்.
இந்தத் தொகுப்பு யார் யாருக்கெல்லாம் கிடைத்திருக்கிறது தெரியுமா?
ஊராட்சி பகுதியின் தூய்மைப் பணியாளர்கள், தூய்மைக் காவலர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி ஆபரேட்டர்கள், சலவைத் தொழிலாளர்கள், முடி திருத்தும் தொழிலாளர்கள், நையாண்டி மேளக்காரர்கள், தீப்பெட்டி ஏற்றுமதி, இறக்குமதி லோடுமேன்கள், காய்கறி லோடுமேன்கள், டூ வீலர் மெக்கானிக்குகள், சமையல் வேலை செய்பவர்கள், தையல் கலைஞர்கள், கோவில் ஊழியர்கள், ரேடியோ செட் தொழிலாளர்கள், பந்தல் அமைப்பு தொழிலாளர்கள், பிரிண்டிங் பிரஸ் தொழிலாளர்கள், டீ கடை மாஸ்டர், சப்ளையர்கள், மினி ஆட்டோ டிரைவர்கள், வேன் ஸ்டேண்ட் (சீட் வேன், லோடு வேன்) ஓட்டுநர்கள், ஆட்டோ ஸ்டேண்ட் (லோடு ஆட்டோ, பயணியர் ஆட்டோ) ஓட்டுநர்கள், கார் ஸ்டேண்ட் ஓட்டுநர்கள், புகைப்பட கலைஞர் சங்கத்தினர், வக்கீல் குமாஸ்தாக்கள், கோர்ட் குமாஸ்தாக்கள், ஊர்க்காவல் படையினர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் என, யாரும் விட்டுப்போகாமல், பார்த்துப் பார்த்து வழங்கியிருக்கிறார். பத்திரிகையாளர்களுக்கும் நிவாரணம் கிடைத்துள்ளது.
“நீங்க ஓட்டு போடுங்க. நான் நல்லது செய்யலைன்னா.. என் சட்டைய பிடிங்க. நான் மற்ற எம்.எல்.ஏ.க்கள் மாதிரி கிடையாது. அதிகாரிகள், காலைக் கையைப் பிடித்தாவது, தொகுதி மக்களுக்கு நல்லது பண்ணுவேன்.” என்று வாக்குறுதி அளித்தும், எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு வாக்காளர்களைக் கவனித்தும், எம்.எல்.ஏ. ஆனவர், ராஜவர்மன்.
அப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் வைப்பாற்றின் குறுக்கே, ஒரு கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் ஒரு தடுப்பணை, வல்லம்பட்டி ஓடையின் குறுக்கே, ஒரு கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் ஒரு தடுப்பணை என ராஜவர்மனின் கோரிக்கை, மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கும் அப்போது நன்றி தெரிவித்தார் ராஜவர்மன். அதன்பிறகு, அமைச்சருடனான நட்பில் பிணக்கு ஏற்பட்டதும், ராஜேந்திரபாலாஜியின் பெயரை எந்த இடத்திலும் உச்சரிப்பதோ, குறிப்பிடுவதோ இல்லை. அமைச்சருடனான பனிப்போரை, தொடர்ந்தபடியே உள்ளார். அதனால், விருதுநகர் மாவட்டத்தில், ஜாதி ரீதியாக ஆளும்கட்சி பிளவுபட்டிருப்பது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ளது.
தனது எந்த ஒரு செயலையும், முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆணைக்கிணங்க என்றே குறிப்பிடும் ராஜவர்மனை, ‘சாத்தூர் சட்டமன்றத் தொகுதியின் செல்லப்பிள்ளை’ என அழைக்கிறார்கள், அவரது விசுவாசிகள்.