புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டம் நம்பம்பட்டி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த வங்கி மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் அப்பகுதி பொதுமக்களுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு மேற்பார்வையாளராக மத்திய கூட்டுறவு வங்கி தனபால் என்பவரும், செயலாளராக துரையப்பன் (பொறுப்பு) என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த கூட்டுறவு வங்கியில் விவசாயக் கடன், நகைக்கடன், பருத்தி, கரும்பு, நெல் போன்ற பயிர்களுக்கு காப்பீடு செய்வது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய திட்டங்களை செயல்படுத்துவதில் மேற்பார்வையாளர் தனபால் தாமதப்படுத்துவதாகவும் இதுகுறித்து அவரிடம் விவசாயிகள் கேட்டால் முறையாக பதில் கூறுவதில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் சார்பில் கூறப்படுகிறது. மேலும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தினந்தோறும் இங்கு வந்து விட்டு மேற்பார்வையாளர் வராததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
இதனையடுத்து நேற்று காலையிலும் வழக்கம் போல் மேற்பார்வையாளர் வராததால் ஆத்திரமடைந்த நம்பம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் சிலர் கூட்டுறவு வங்கி முன்பு சாலை மறியலில் ஈடுபடப் போவதாகக் கூறி அலுவலகம் முன்பு ஒன்று திரண்டனர். கூட்டுறவு வங்கி அலுவலகமும் காலை 11 மணி வரை திறக்கப்படாமலேயே இருந்தது. இதனையறிந்த நம்பம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன் மற்றும் விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக விவசாயிகளிடம் உறுதியளித்ததையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.