
விழுப்புரம் அருகே உள்ளது அகரம் சித்தாமூர் கிராமம்.இந்த கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மூன்று பேர்கள். இவர்கள் மூவரும் கொரோனா நோய்த் தடுப்பு சம்பந்தமாக அரசு பிறப்பித்துள்ள தடை உத்தரவை அடுத்து வெளியில் எங்கும் சென்று வேலை செய்து பிழைக்க முடியாமலும், அதனால் வேலைவாய்ப்பு இல்லாமல் வருமானம் இல்லாமல் சாப்பாட்டிற்கு மிகவும் கஷ்டப்படுவதாகவும் கூறி மாவட்ட எஸ்பி ஜெயக்குமாரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினார்கள்.
இதையடுத்து மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், அந்தக் குடும்பத்தினரை பற்றி முழுவதும் விசாரித்து, அவர்கள் படும் சிரமத்தை அறிந்து உடனே ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகை சாமான்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்களை அவரே வாங்கிச் சென்று அந்த குடும்பத்தினரை நேரில் சந்தித்து அளித்ததோடு அவர்கள் வீட்டு முன்பு அமர்ந்து அவர்கள் உடல் நலம், குடும்பம் பற்றி அக்கரையோடு விசாரித்து அவர்கள் குறைகளையும் கேட்டறிந்தார். குடும்பத்தினர் மிகவும் சந்தோஷமடைந்து மாவட்ட எஸ்பி ஜெயக்குமாருக்கு தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

ஏற்கனவே காவல்துறை சார்ந்தவர்களின் குடும்பத்தினர் சிரமப்படுவது அறிந்து அவர்களுக்கும் நல உதவிகள் செய்து வருகிறார். அதேபோல் காவல்துறையைச் சாராத மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களில் மருத்துவ உதவி படிப்பு உதவி கிடைக்காமல் தவிப்பவர்களுக்கும் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறார்.அதேபோன்று மாவட்டத்தில் சிறப்பாகப் பணி செய்யும் காவல்துறை சார்ந்தவர்களை அழைத்து பாராட்டி பரிசளித்து ஊக்கப்படுத்தி வருவதோடு, காவல்துறையைச் சாராதவர்கள் வீரதீர செயல்கள் செய்பவர்களையும் பாராட்டி ஊக்கப்படுத்தி வருகிறார்.

ஒரு மாவட்ட காவல்துறை அதிகாரி என்ற பந்தா இல்லாமல் அனைத்து மக்களோடும் அலுவலர்களோடும் பணி செய்து வரும் எஸ். பி. ஜெயக்குமாரை மாவட்ட மக்கள் பெரிதும் பாராட்டி வருகிறார்கள்.