கள்ளக்குறிச்சி மாவட்டம் சூளாங்குறிச்சி கிராமத்தின் அருகே மணிமுத்தாறு அணை உள்ளது. பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான இந்த அணைப் பகுதியில் மீன் வளர்ப்பதற்கு ஏலம் விடப்பட்டு 40 லட்சம் மதிப்பில் ஏலம் எடுத்து மீன் வளர்த்து வந்தனர். இந்த ஆண்டுக்காக அணையிலிருந்து பாசனத்துக்குத் தண்ணீர் விடப்பட்டு அறுவடைக் காலம் முடிந்த நிலையில் அதேபோல் மீன் வளர்ப்புக் குத்தகை காலம் முடிந்து அதன் அறுவடைக் காலமும் வந்தது.
டேமை மீன் குத்தகைக்கு எடுத்தவர்கள் கடைசி நேரம் என்பதால் பொதுமக்களை மீன்பிடிக்க அனுமதித்துள்ளனர். இதை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த சூளாங்குறிச்சி, அகரக்கோட்டாலம், வாணியேந்தல், ரங்கநாதபுரம், பழைய சிறுவங்கூர், ஆலத்தூர், பாலப்பட்டி அணைக்கரை உட்பட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டு வந்து சூளாங்குறிச்சி டேம் பகுதியில் மீன்பிடி திருவிழா நடத்தினர். இதில் கொடுமை என்னவென்றால் சமூக இடைவெளி எதுவும் இல்லாமல் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒரே நேரத்தில் கூட்டமாகத் திரண்டு டேமுக்குள் இறங்கி மீன்பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தியாகதுருகம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு விரைந்து வந்தனர். மீன்பிடிக்க இறங்கிய மக்கள் சேறும் சகதியுமாக உள்ள தண்ணீரில் மூழ்கிச் சிக்கி விபரீதம் ஏதும் நிகழாத வண்ணம் அனைவரையும் கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர்.
இதையெல்லாம் பொருட்படுத்தாமல் கிராம மக்கள் தொடர்ந்து மீன் பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். டேம் பகுதியில் விரால் மீன், கெண்டை மீன், ஜிலேபி என ஏராளமான மீன்கள் மக்களுக்குக் கிடைத்தன. அந்த ஆர்வத்தில் போலீசார் எச்சரிக்கையும் மீறி சுமார் 3000 கிலோ அளவிற்கு மீன்களை பொது மக்கள் ஆர்வமாகப் பிடித்துச் சென்றனர். செய்வதறியாது திகைத்த போலீசார் அனுமதியின்றி கூட்டத்தைக் கூட்டியதாக அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் தியாகதுருகம் போலீசில் புகார் அளித்தார். அதையடுத்து சங்கராபுரம் மீனவர் சங்கத் தலைவர் மணி, அகரக்கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த பிச்சை, முருகன், ரோடு மாமந்தூர் பாண்டியன், ரங்கநாதன், அந்தோணி, உட்பட, சுமார் 15-க்கும் மேற்பட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீஸ் போட்ட வழக்கைப் பார்த்துக்கொள்ளலாம் மீன் கிடைத்ததே பெரிய சந்தோஷம் என்று கூறிய படி மக்கள் கலைந்து சென்றனர்.