கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ளது சேந்தமங்கலம். இந்த கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு குடியிருக்க வீடுகள் இல்லாததால் இட நெருக்கடியில் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் வீட்டுமனை இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து மனு அளித்ததோடு அதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளனர்.
இதன்பிறகு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பத்தாண்டுகளுக்கு முன்பு 211 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதில் 176 பயனாளிகளுக்கு வருவாய்த் துறையின் சார்பில் பட்டா மட்டும் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான இடத்தை அளந்து அடையாளம் காட்டப்படவில்லை. இதற்காகவும் பல கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளனர். ஆனால், அதிகாரிகள் அலட்சியப் போக்கையே இதுவரை கடைபிடித்து வருகின்றனர்.
இதனால் கோபமடைந்த அக்கிராம மக்கள் நேற்று காந்தி ஜெயந்தி அன்று தங்களின் எதிர்ப்பை அரசுக்கும் அதிகாரிகளுக்கும் வெளிப்படுத்தும் வகையில் அரசு வழங்கிய வீட்டுமனை பட்டா இங்கே வீட்டுமனை எங்கே காணவில்லை என்று கோஷம் எழுப்பியபடி கருப்புக்கொடி ஏந்தி தங்கள் குடும்பத்தினருடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி விஜயகுமார், திருநாவலூர் இன்ஸ்பெக்டர் விஜி, ஆதிதிராவிடர்கள் வட்டாட்சியர் சற்குணம் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
விரைவில் பட்டாவுக்கான இடத்தை அளவீடு செய்து பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன்பேரில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர்.