வேலூர் மாவட்டம் அணைக்கட்டுக்கு மேல் உள்ள மலை கிராமங்களான பீஞ்சமந்தை, தொங்குமலைப்பகுதி என்கிற கிராமத்தில் நாட்டு துப்பாக்கிகள் பல உள்ளன என்கிற தகவல் போலிஸாருக்கு கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து, மாவட்ட துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தன் தலைமையில் போலீசார் ஜீன் 29ந்தேதி அந்த கிராமங்களுக்கு சென்று சோதனை நடத்தினர்.
சோதனையில் பிஞ்சமந்தை கிராமத்தை சேர்ந்த முனுசாமி என்பவரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு நாட்டு துப்பாக்கியும், தொங்குமலை கிராமத்தில் வசிக்கும் அழகேசன் மற்றும் குள்ளையன் என்கிற அண்ணன் தம்பி வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு நாட்டு துப்பாக்கியும் பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது வேப்பங்குப்பம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பழுதான துப்பாக்கிகளை பழுது நீக்கும், கொரிப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த முனிராஜ் என்பவர் பற்றி தகவல் சொல்ல அவரையும் கைது செய்துள்ளது காவல்துறை.
அதேபோல், திருப்பத்தூர் பகுதியிலும் நாட்டு துப்பாக்கிகள் இரண்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி.பிரவேஷ்குமார் அலுவலகத்தில் இருந்து செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளனர். துப்பாக்கி வைத்திருந்தவர்கள் யார் என்கிற தகவலை தெரிவிக்கவில்லை. அதோடு, அனுமதி பெறாமல் நாட்டு துப்பாக்கி வைத்திருந்தால் தங்கள் கிராமம் சம்மந்தப்பட்ட காவல்நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்களில் அடிக்கடி கள்ளத்துப்பாக்கிகள் பறிமுதல் என்பது நடைபெற்றுவருகிறது. அதோடு, துப்பாக்கி செய்யும் மற்றும் பழுதுபார்ப்பவர் ஒருவரையும் கைது செய்துள்ளது போலிஸ். கள்ள துப்பாக்கி வைத்திருப்பது தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கை சமூக ஆர்வலர்கள் தரப்பில் இருந்து எழுந்துள்ளது.