நேற்று முன்தினம் (06.11.2021) இரவு முதலே சென்னையில் விட்டுவிட்டுத் தொடர்ந்து மழை பொழிவதால் சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஒவ்வொருமுறை பொழியும் அதீத மழை மற்றும் வெள்ளத்தில் முதலில் பாதிக்கப்படும் பகுதியாக இருப்பது சென்னையின் வேளச்சேரி பகுதி. இந்தமுறையும் அங்கும் மழைநீர் தேங்கி வெள்ளம் உருவாகியுள்ளது. வீட்டில் நிறுத்திவைக்கப்படும் வாகனங்கள் மழைநீரில் பாதிக்கப்படும் என்பதால் வேளச்சேரி பாலத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
மீட்புப்படையினரும் தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், வேளச்சேரியில் கனமழையால் வெள்ளம் சூழ்ந்த நிலையில் வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் சிக்கித்தவித்துவந்த 9 மாத கர்ப்பிணி பெண்ணை மீட்புப்படையினர் போராடி மீட்டுச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. வேளச்சேரி ஏஜிஎஸ் காலனியைச் சேர்ந்த 9 மாத கர்ப்பிணிப் பெண் ஜெயந்தி, வெள்ளநீர் வீட்டுக்குள் புகுந்ததால் வீட்டைவிட்டு வெளியே வர முடியாமல் சிக்கித்தவித்துள்ளார். இதனையடுத்து அங்குச் சென்ற மீட்புப்படையினர், அவரை மீட்டு ஃபைபர் படகு மூலம் அவரது உறவினர் வீட்டுக்குப் பத்திரமாகக் கொண்டுசென்று சேர்த்தனர்.