திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு விவசாயச் சங்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி வேளாண்மைத் துறை இணை இயக்குநர், மின்சார வாரிய மூத்தப் பொறியாளர், கூட்டுறவு மாவட்ட பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வனத்துறை சார்பில் உதவி மண்டல வன அலுவலர் கலந்து கொள்ளாமல் இருந்ததால் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த வன சரகர்களை மாவட்ட ஆட்சியர் கூட்டத்திலிருந்து வெளியேற உத்தரவிட்டார். இதற்கு விவசாயிகள் கைதட்டி வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் தங்களுடைய பகுதிகளில் உள்ள பிரச்சனைகள் குறித்து விவாதித்தனர். அதில் தனியார், நெல் கொள்முதல் செய்யும் முறையில் பெரிய அளவில் முறைகேடுகள் நடப்பதாகவும் பெரிய ஆலைகள் நெல்லை நேரடியாக விவசாயிகள் இடமிருந்து வாங்காமல் முகவர்கள் மூலமாகக் கொள்முதல் செய்வதால் அரசு அறிவித்த ஈரப்பதம் மற்ற விஷயங்கள் தங்களுக்குப் பொருந்தாது என்று கூறி வருகின்றன. எனவே, அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு நெல் கொள்முதல் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
அதேபோல் 100 நாள் திட்டத்தில் செயல்படுத்த முடியாத ஏரிகள், குளங்கள் தூர்வாரும் பணிகளை அம்ரிஷ் சரோவர் திட்டத்தின் கீழ் நமது மாவட்டத்தில் செயல்படுத்துவதை மாவட்ட திட்ட இயக்குநர் விளக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். புள்ளம்பாடி கால்வாய் தினம் அரசு சார்பில் கொண்டாட வேண்டும் என்பதை மாவட்ட ஆட்சியர் முன்பு கோரிக்கையாக விவசாயிகள் முன் வைத்தனர். மேலும் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் 50க்கும் மேற்பட்ட மனுக்களை அளித்தனர். அவை அனைத்தையும் பரிசீலித்து உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் இக்கூட்டத்தின் வாயிலாகத் தெரிவித்தார்.