திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்ற சுதந்திர விழாவில் விமான நிலைய இயக்குநர் தர்மராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.
அதன் பின் பேசிய அவர், “கரோனா காலத்தில் மக்களின் உயிரைப் பாதுகாக்கப் பாடுபட்டு வரும் முன் களப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம். மூன்றாவது அலை எப்போது வேண்டுமானாலும் வரலாம்; அதை எதிர்கொள்ளத் தயாராகும் வகையில் விமான நிலைய வளாகத்தில் 12 தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு பணியாளர்கள் உள்ளிட்ட 2000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சிறப்புத் திட்டங்கள் மூலம் திருச்சி விமான நிலையம் 1795 விமானச் சேவைகளைக் கையாண்டுள்ளது. இதன் மூலம் 1,82,604 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். புதிய முனையம் ஓடுதள விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளை விமான நிலையத்தில் நடைபெற்று வருகின்றன” என்று பேசினார்.