
நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் இன்று முதல் கர்ப்பிணி பெண்களுக்கும் கரோனா தடுப்பு ஊசி போடும் முகாம் கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அரசு ஆரம்ப சுகாகார நிலையத்தில் தொடங்கியது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியன் தலைமையில், தமிழ்நாடு அரசு சட்டமன்ற மதிப்பீட்டு குழு உறுப்பினரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரருமான உதயநிதி ஸ்டாலின், தமிழக வேளாண் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நல அமைச்சர் வெ.கணேசன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடும் முகாமினை தொடங்கி வைத்து பேசினார்.
அவர் பேசும்போது, "தமிழகத்தில் தற்போது கரோனா தொற்று என்பது குறைந்து வருகிறது. பொதுமக்கள் அச்சமின்றி தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்கின்றனர். தற்போது 18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி. நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டுதல்படி தமிழகத்திலேயே முதல் முறையாக கடலூர் மாவட்டம், பெண்ணாடத்தில் தடுப்பூசி போடும் பணி துவங்கப்பட்டு உள்ளது. மத்திய தொகுப்பில் இருந்து உரிய அளவில் தடுப்பூசி கொடுக்கப்படாததால் இதுவரை தட்டுப்பாடு நிலவி வருகிறது. விரைவில் இவை நிவர்த்தி செய்யப்படும்" என்றார்.
பின்னர் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த உதயநிதி தலைமையிலான அமைச்சர்கள் குழுவினர், திட்டக்குடி திருவள்ளுவர் கலை அறிவியல் கல்லூரியில் 50 ஆக்ஜிசன் படுக்கைகளுடன் கூடிய 150 சிறப்பு படுக்கைகள் கொண்ட கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை திறந்து வைத்தனர். பின்னர் திட்டக்குடி வெலிங்டன் நீர் தேக்கத்தை பார்வையிட்ட அமைச்சர்கள் குழுவினர் விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
அதனைத் தொடர்ந்து விருத்தாசலத்திற்கு வந்த உதயநிதி தலைமையிலான அமைச்சர்கள் குழுவினர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையை பார்வையிட்டு மேம்படுத்தப்பட்ட சுகாதார அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தனர். இந்த நிகழ்ச்சிகளின்போது பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், விருத்தாசலம் சார் ஆட்சியர் அமித்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.