கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகே உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் கடந்த 17ம் தேதி மாணவி மரணம் தொடர்பாக பெரும் கலவரம் நடைபெற்றது. இந்த கலவரத்தில் பள்ளி பெரும் சேதத்தை சந்தித்தது. அதன்பிறகு காவல்துறையினர் ஒரு வழியாக கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவந்தனர். கலவரம் முடிந்ததும் பலர் தப்பி சென்றனர். அப்போது அவர்கள் எடுத்து வந்த இருசக்கர வாகனங்களை ஆங்காங்கே போட்டுவிட்டு ஓடிவிட்டனர்.
அந்த இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து, ஜே.சி.பி இயந்திரம் மூலம் லாரியில் ஏற்றி சின்ன சேலம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து நிறுத்தி வைத்துள்ளனர். அதில் சில இருசக்கர வாகனங்கள் எரிந்த நிலையில் உள்ளன. பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களின் உரிமையாளர்கள் யாரும் தங்களுடைய வாகனத்தை கேட்டு பெறுவதற்காக காவல் நிலையத்தை அணுகவில்லை. காரணம் இருசக்கர வாகனத்தை தேடி வந்தால் போலீசார் தங்கள் மீது வழக்கு போட்டு சிறைக்கு அனுப்பி விடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக வாகன உரிமையாளர்கள் யாரும் இன்றுவரை காவல் நிலையம் வரவில்லை என்கின்றனர் காவல்துறையினர்.