சேலம் அருகே காப்புக்காடு பகுதியில் மான் உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக வனப்பகுதியில் சுற்றித்திரிந்த இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் சேர்வராயன் வடக்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட ஏற்காடு மலைப்பகுதிக்கு உட்பட்ட மஞ்சவாடி தெற்கு காப்புக்காடு பகுதியில் வேட்டை கும்பல் நடமாட்டம் உள்ளதாக வன அலுவலர் காஷ்யப் ஷஷாங் ரவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து சேர்வராயன் வடக்கு வனச்சரகர் பரசுராமமூர்த்தி தலைமையில் வனக்காவலர்கள் மஞ்சவாடி காப்புக்காடு பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அதில், மஞ்சவாடி காப்புக்காடு கரும்பாறை வழித்தடத்தில் மர்ம நபர்கள் 2 பேர் சுற்றிக் கொண்டிருந்தனர். அவர்களை வனத்துறையினர் பிடிக்க முயன்றபோது தப்பி ஓடிவிட்டனர்.
தீவிர விசாரணையில், தப்பி ஓடிய நபர்கள் குறித்த விவரம் தெரிய வந்தது. அவர்களில் ஒருவர் ஏற்காடு அரங்கம் பகுதியைச் சேர்ந்த மணி (43) என்பதும், மற்றொருவர் செந்திட்டு பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் (33) என்பதும் தெரிய வந்தது. அவர்கள் மான், முயல் உள்ளிட்ட வன விலங்குகளை இறைச்சிக்காக வேட்டையாட வந்திருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்கள் மீது வன விலங்குகளை வேட்டையாட முயன்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மாவட்ட வன அலுவலர் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவர்களுக்கு தலா 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து மஞ்சவாடி பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.