புதுக்கோட்டை மாவட்டத்தில் அடுத்தடுத்து நடக்கும் கொள்ளை சம்பவங்களில் சிசிடிவி பதிவுகள் இருந்தும் கூட திருடர்கள் பிடிபடாததால், நாளுக்கு நாள் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலுக்குள் நேற்று இரவு சுவர் ஏறிக் குதித்த இருவர் கருப்பு வேட்டி, கருப்பு துண்டால் முகத்தை மறைத்துக் கொண்டும் பச்சை வேட்டி கட்டிய நபர் மஞ்சள் பனியனை இழுத்து முகத்தை மறைத்துக் கொண்டு உண்டியல் அருகே வந்து கேமராவைப் பார்த்து பழிப்பு காட்டிவிட்டு தலைக்கு மேலே கையெடுத்து கும்பிட்டனர்.
பின்னர் இருவரும் சேரந்து எவர்சில்வர் உண்டியலை தூக்கிச் சென்று பின்னால் வைத்து, பூட்டை உடைத்து உண்டியல் பணத்தை அள்ளிக் கொண்டு மீண்டும் உண்டியலை தூக்கி வந்து இருந்த இடத்தில் வைத்துவிட்டு கேமராவை உடைத்துவிட்டு இரும்பு உண்டியலை உடைக்க முயன்றுள்ளனர். இரும்பு உண்டியலில் உள்ள பூட்டை அறுத்து உடைத்த பிறகு லாக்கர் உடைக்க முயன்ற போது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்ததைப் பார்த்து அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
ஓடும் போது அரிவாளை காட்டி மிரட்டிவிட்டு இரு பைக்குகளில் தப்பிச் சென்றுள்ளனர். உண்டியலில் கிடந்த பூட்டுகள் கோயிலுக்கு வெளியே உடைக்கப்பட்டு கிடந்தது. சிசிடிவி கேமரா கோயில் வளாகத்திலேயே தூக்கி வீசப்பட்டிருந்தது. இந்த சம்பவம் குறித்து கிராமத்தினரும் கீரமங்கலம் போலீசாரும் வந்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர். சிசிடிவியில் பதிவாகியுள்ள நபர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இதே போல கடந்த 3 நாட்களுக்கு முன்பு கொத்தமங்கலம் முத்தையா சுவாமி கோயிலுக்காக சாலையோரம் வைக்கப்பட்டிருந்த உண்டியலும், இதே போல பூட்டு அறுத்து உடைக்கப்பட்டு திருட்டு நடந்துள்ளது. கோயில் உண்டியல் திருடுவதற்காக ஒரு கும்பல் கீரமங்கலம் பகுதியில் முகாமிட்டு திருடி வருகிறார்களோ என்ற அச்சம் பொதுமக்களிடம் எழுந்துள்ளது. ஆகவே சிசிடிவி பதிவுகளை வைத்து உண்டியல் கொள்ளையர்களை பிடித்தால் அடுத்தடுத்த சம்பவங்கள் தடுக்கப்படலாம் என்கின்றனர்.