இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை மே 17- ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் காவல்துறையினரின் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடைகளைத் திறந்துள்ளது தமிழக அரசு. இதனால் மதுப்பிரியர்கள் பெரிய சந்தோஷம் அடைந்தாலும், பெண்களிடையே மிகப் பெரிய அளவில் எதிர்ப்புக் கிளம்பியது. அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து மிகப்பெரிய எதிர்ப்புப் போராட்டத்தை அறிவித்தது. அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் நேற்றைய தினம் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் திருச்சி திமுக மாவட்ட துணை செயலாளர் முத்து செல்வம், தன்னுடைய எடமலைப்பட்டி புதூர் பகுதியில் டாஸ்மார்க் திறக்கும் அதே நேரத்தில் டீக்கடை திறக்கும் போராட்டத்தை நடத்தி பரபரப்பை உண்டு பண்ணினார்.
இது குறித்து அவரிடம் பேசிய போது, "இந்த அரசு மது கடையைத் திறந்து விட்டு ஏழை மக்களின் வாழ்வாதரமான டீ கடையைத் திறப்பதற்கு அனுமதி அளிக்கவில்லை. இதனால் டீ கடை திறப்புப் போராட்டம் நடத்தலாம் என்று முடிவு செய்து, எங்கள் பகுதியில் டாஸ்மாக் திறக்கும் அதே நேரத்தில் டீ கடை திறந்தோம். காலை 10.00 மணிக்கு ஒரு கேனில் டீ கொண்டு வரப்பட்டு, அதில் ரிப்பன் வெட்டி நானே கடையைத் திறந்து 60 டீ விற்பனை செய்து விட்டேன். டீ விற்றுக்கொண்டு இருக்கும் போதே விசயம் கேள்விப்பட்டு வந்த எடமலைப்பட்டி புதூர் இன்ஸ்பெக்டர் நிக்சன் டீ கேனை பறிமுதல் செய்து எங்கள் மீது வழக்குப் பதிந்துள்ளார்". இவ்வாறு அவர் பேசினார்.
டாஸ்மாக் பதிலாக டீ கடை திறப்புப் போராட்டத்தைச் சற்றும் எதிர்பார்க்காத காவல்துறையினர் டீ கடை திறந்த திமுக மாவட்டத் துணைச் செயலாளர் உள்ளிட்ட 20 பேர் வழக்குப் பதிவு செய்துள்ளது.