திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பின் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது; "அரசின் நடவடிக்கையால் தமிழகத்தில் உயிர்ச்சேதம் குறைக்கப்பட்டுள்ளது. கரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கரோனாவைத் தடுக்க உலக நாடுகளே திணறி வரும் சூழலில் தமிழகம் சிறப்பாகச் செயல்படுகிறது. திருச்சி சிப்காட்டில் 250 ஏக்கரில் ரூபாய் 200 கோடி மதிப்பில் தொழிற்பூங்கா ஏற்படுத்தப்படும். திருச்சியில் தொழில் தொடங்க ஐந்து நிறுவனங்களுடன் உலக முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்திடப்பட்டுள்ளது.
திருச்சியில் 6,128 சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூபாய் 269 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது; மேலும் ரூபாய் 200 கோடி வழங்கப்படும். முக்கொம்பில் தடுப்பணை கட்டும்பணி 40% நிறைவடைந்துள்ளது. ரூபாய் 495 கோடியில் கொள்ளிடத்தில் புதிய கதவணை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொது முடக்கம் நீட்டிப்பு குறித்து மருத்துவக் குழு உடனான ஆலோசனைக்குப் பிறகு முடிவு செய்யப்படும். தமிழக விவசாயிகளுக்கு தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும் என்பதில் மாற்றமில்லை.
மருத்துவத்துறை சார்ந்த பிரச்சனைக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கான தேவை ஏற்படவில்லை. மருத்துவ நிபுணர் குழுவின் ஆலோசனை, பரிந்துரைப்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு வருவாய் குறைப்பு ஏற்பட்டுள்ளது. மாதம் ரூபாய் 12 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும் என நிதித்துறைச் செயலர் கூறியுள்ளார்." இவ்வாறு முதல்வர் பேசினார்.