திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை பகுதியில் கல்யாணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் குடியிருக்கும் வீடு பொதுப் பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் வருவாய் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தாமல் நேற்று முன்தினம் (4 ஆம், தேதி) காவல்துறையினரின் பாதுகாப்புடன் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு சென்று வீட்டை இடிக்க வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கல்யாணியின் இளைய மகன் ராஜ்குமார் செல்வந்தர் ஒருவர் தனது குடும்பத்திற்கு தானமாக கொடுத்த தனிநபர் பட்டா நிலத்தில் தாங்கள் வசிப்பதாக கூறியதை ஏற்க மறுத்த அதிகாரிகள் உரிய கால அவகாசம் வழங்காமல் வீட்டை இடிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான ராஜ்குமார் வீட்டை இடிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகள் முன்னிலையில் உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தார்.
அப்போது அங்கிருந்த தீயணைப்பு வீரர்கள் தங்கள் கையில் வைத்திருந்த தீ அணைப்பான் கருவி மூலம் அவரது உடலில் பற்றிய தீயை அனைத்து, 60% காயங்களுடன் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர், அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார், இந்த விவகாரத்தில் பணியின் போது கவன குறைவாக செயல்பட்டதாக கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ப்ரீத்தி, ஏளாவூர் வருவாய் ஆய்வாளர் கோமதி, தேர்விழி கிராம நிர்வாக அலுவலர் பாக்கிய ஷர்மா ஆகியோர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர், இந்த நிலையில் மருத்துவமனையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி ராஜ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.