சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அலுவலகத்தில் (டி.என்.பி.எஸ்.சி.) செய்தியாளர்களைச் சந்தித்த டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலச்சந்திரன் இ.ஆ.ப., "டி.என்.பி.எஸ்.சி. குரூப்- 4 தேர்வு ஜூலை 24- ஆம் தேதி அன்று நடைபெறும். ஜூலை 24- ஆம் தேதி அன்று காலை 09.30 மணி முதல் 12.30 மணி வரை டி.என்.பி.எஸ்.சி. குரூப்- 4 தேர்வு நடைபெறும். குரூப்- 4 தேர்வுக்கு மார்ச் 30- ஆம் தேதி முதல் ஏப்ரல் 24- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
குரூப்- 4 தேர்வில் 300 மதிப்பெண்களுக்கு மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். 7,382 பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வில் 81 பணியிடங்கள் விளையாட்டு கோட்டா மூலம் நிரப்பப்படும். 7,301 இடங்கள் போட்டித் தேர்வில் மூலம் நிரப்பப்படும். 274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெற உள்ளது. ஜூலையில் நடைபெறும் தேர்வுக்கான முடிவுகளை வரும் அக்டோபர் மாதம் வெளியிட டி.என்.பி.எஸ்.சி. திட்டமிட்டுள்ளது. 90 மதிப்பெண்களுக்கு மேல் பெறுபவர்களின் தரவரிசை வெளியிடப்படும். குரூப்- 4 தேர்வுக்கு சுமார் 24 லட்சம் விண்ணப்பங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் மாதம் 19- ஆம் தேதி அன்று சமூக நலத்துறைத் தேர்வுகளுக்கு கணினி வழி தேர்வு நடைபெற உள்ளது. விண்ணப்பத்தாரர்கள் தேர்வு எழுதும் மையத்தை இனிமேல் டி.என்.பி.எஸ்.சி.யே தேர்வு செய்யும். 2019- ஆம் ஆண்டுக்கு முன் தேர்வு மையம் விண்ணப்பத்தாரர்களால் தேர்வு செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது." இவ்வாறு அவர் தெரிவித்தார்.
டி.என்.பி.எஸ்.சி. குரூப்- 4 தேர்வு குறித்த கூடுதல் விவரங்களுக்கு என்ற https://www.tnpsc.gov.in/Home.aspx என்ற டி.என்.பி.எஸ்.சி.யின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.