தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய முதல்வர் பழனிசாமி, "கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு தமிழக மக்கள் அளித்து வரும் ஆதரவிற்கு நன்றி. பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று மக்கள் தகுந்த ஒத்துழைப்பு வழங்கினர். அரசு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்குப் போதுமான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. மத்திய, மாநில அரசு மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கரோனா குறித்து வதந்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா தொற்றுக்கான அறிகுறியுடன் இருப்பதை அரசுக்கு தெரியப்படுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி, பழங்கள் தொடர்ந்து விற்கலாம். மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் தொடர்ந்து விநியோகம் செய்யப்படும். போதுமான அளவு மருந்துகள் கையிருப்பில் உள்ளன. கரோனா தடுப்பு பணிகளுக்காக ஏற்கனவே ரூபாய் 60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் கூடுதலாக ரூபாய் 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்." இவ்வாறு முதல்வர் பேசினார்.