திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே தும்பேரி ஊராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் மொத்தம் 677 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் சத்துணவு திட்டத்தின் கீழ் 416 மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்டு வருகின்றனர். பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக ஸ்ரீவித்யா மற்றும் உதவியாளராக பானுப்பிரியா வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் செப்டம்பர் 27ஆம் தேதி பள்ளியில் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய மதிய உணவு வழங்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் தலைமையாசிரியரிடம் புகார் தெரிவித்தனர். தலைமை ஆசிரியர் லோகநாதன், சத்துணவு உதவியாளர் பானுப்பிரியா பள்ளியிலிருந்து வீட்டுக்கு செல்ல வந்த போது அவர் வைத்திருந்த ஸ்டீல் பக்கெட் வாங்கி சோதனையிட்ட போது அதில் மாணவர்களுக்கு மதிய உணவோடு வழங்கக்கூடிய முட்டைகள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியானவர், அதனை தனது மொபைல் போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். இது தற்போது வைரலாகி வருகிறது.
இதுகுறித்து சத்துணவு அமைப்பாளர் ஶ்ரீவித்யா செய்தியாளர்களிடம் கூறியது, “தலைமையாசிரியர் லோகநாதன் என்பவர் அடிக்கடி சத்துணவு சமைக்கும் அறைக்கு வந்து தன்னை தவறான வார்த்தையில் பேசியும் தவறான முறையில் நடக்கவும் முயன்றார். அதற்கு நான் ஒத்துழைக்கவில்லை. இதனால் என்னை பழிவாங்க வேண்டும் என கிராம மக்களில் 10 பேரை திரட்டி என்னை பணி செய்ய விடாமல் செயல்பட்டு வந்தார். இதுகுறித்து ஏற்கனவே நான் வட்டார வளர்ச்சி அலுவலர், முதன்மை கல்வி அலுவலர் ஆகியோரிடம் புகார் அளித்து அதிகாரிகள் விசாரணை நடத்திய பின்னர் தலைமையாசிரியர் சமையல் அறைக்கு வருவதை தவிர்த்து விட்டார். சத்துணவு உதவியாளர் பானு மூலம் முட்டைகளை வெளியே எடுத்துவர சொல்லி அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினார்” என்கிறார்.
இதுக்குறித்து கல்வித்துறை, சத்துணவு துறை அதிகாரிகள், தலைமை ஆசிரியர் மற்றும் சத்துணவு அமைப்பாளரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.