சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி (20.06.2024) தொடங்கியது. அப்போது மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இரண்டாம் நாளில் (21.06.2024) இருந்து பல்வேறு துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டது குறித்த கவன ஈர்ப்புக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசுகையில், “திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியார்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் 13-6-2024 அன்று இருவேறு சமூகத்தைச் சார்ந்த மணமக்களுக்கு சாதி மறுப்புத் திருமணம் செய்து வைக்கப்பட்டு, அதுதொடர்பான புகைப்படம் முகநூல் பக்கத்திலே பதிவிடப்பட்டதாகத் தெரிகிறது. இதனையடுத்து, மணப்பெண்ணின் குடும்பத்தினர் கடந்த 14-6-2024 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குச் சென்று, இதுகுறித்துக் கேட்டு, தகராறில் ஈடுபட்டு, அங்கிருந்த பொருட்களைச் சேதப்படுத்தியிருக்கிறார்கள்.
இச்சம்பவம் தொடர்பாக, அக்கட்சியின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், பெருமாள்புரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 14 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களில் 7 பெண்கள் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்; 7 ஆண்கள் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். விசாரணையில் இச்சம்பவத்தில் சாதிய வன்கொடுமை நிகழ்ந்திருப்பதற்கான முகாந்திரம் உள்ளதாகச் தெரியவந்ததையடுத்து, இவ்வழக்கில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளும் சேர்க்கப்பட்டு, தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சமூகநீதிக் கொள்கையைத் தனது உயிர் மூச்சாகக் கொண்டு தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம், பெண் கல்வி, சமஉரிமை, சாதி மறுப்புத் திருமணம் ஆகியவற்றை தனது ஆரம்பக்காலம் தொட்டே ஆதரித்து வரக்கூடிய இயக்கமாகும். இதனை இந்த அவையில் உள்ள அனைவரும் அறிவார்கள். நமது அரசு பொறுப்பேற்றதிலிருந்து இதுபோன்ற பிற்போக்குத்தனமான சமூகக் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மிகவும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, இதுபோன்ற இனங்களில் பதிவுசெய்யப்படும் வழக்குகளில் குற்றவாளிகளுக்கு முறையான தண்டனை வாங்கித் தரப்படுகிறது.
இதற்கென ஒரு சிறப்புச் சட்டத்தைக் கொண்டுவருவதைவிட, தற்போது இதுபோன்ற குற்றங்களுக்கு நடைமுறையிலுள்ள சட்டப்பிரிவுகள், குறிப்பாக வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், இந்தியத் தண்டனைச் சட்டம், இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில், தீவிரமான, வேகமான நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது சரியானது என்று இந்த அரசு கருதுகிறது. அந்த வகையில் சமீபத்தில் பல வழக்குகளில், அதிலும் கடந்த ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற குற்றங்களில்கூட விசாரணை துரிதப்படுத்தப்பட்டு, குற்றவாளிகளுக்குத் தண்டனைகள் வாங்கித் தரப்பட்டு வருகின்றன” எனப் பேசினார்.