சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நேரில் ஆஜரானார்.
நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். முதல்முறை ஆஜராகாத சீமான் இரண்டாம் முறை ஆஜராக இருப்பதாகவும் வழக்கில் தொடர்புடைய விஜயலட்சுமி, வீரலட்சுமி ஆகியோர் இருவரும் ஆஜராக வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் திடீரென புகார் கொடுத்திருந்த விஜயலட்சுமி தன்னுடைய புகாரை வாபஸ் பெறுவதாக அறிவித்துவிட்டு சென்றார்.
இந்நிலையில் சீமான் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்று ஆஜரானார். உடன் அவரது மனைவியும் ஆஜராகி இருந்தார். இதனால் அங்கு அதிகப்படியான நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் கூடியிருந்தனர். சுமார் 2 மணி நேரம் அவரிடம் விசாரணை நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், 'தன்னை குறித்து அவதூறு பரப்பியவர்கள் மீது வழக்கு தொடர்ந்து உள்ளேன். அந்த வழக்கில் கண்டிப்பாக அவதூறு பரப்பியவர்கள் நேரில் பதில் சொல்லியே ஆக வேண்டும். ஊடகங்களில் பதில் சொல்பவர்களுக்கு மட்டும் அல்ல கேள்வி கேட்பவர்களுக்கும் பொறுப்பு இருக்க வேண்டும்'' என்றார்.
ஸ்ரீதேவி குப்பம் சாலையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். சீமான் வருகையால் அங்கு அதிகப்படியான தொண்டர்கள் குவிந்ததால் போலீசாருக்கும் நாம் தமிழர் கட்சி தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.