தூத்துக்குடியில் போலீஸ் நடத்திய படுகொலைகளைக் கண்டித்தும் தமிழக அரசு பதவி விலகக் கோரியும் நாளை திமுக மற்றும் தோழமைக் கட்சிகளால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றிபெறச்செய்யுமாறு தமிழக மக்களுக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தூத்துக்குடியில் போலீசாரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் உயர்ந்துக்கொண்டே போகிறது. இன்று வரை 13 பேர் பலியாகியுள்ளனர். தமிழக வரலாற்றில் இவ்வளவுபேர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டது வேறு எப்போதும் நடந்ததில்லை. இந்தப் படுகொலைகளுக்கு தமிழகத்தை ஆளும் எடப்பாடி பழனிச்சாமி அரசே பொறுப்பேற்க வேண்டும். சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்ற முடியாமல் வாக்களித்த மக்களுக்கு வாய்க்கரிசி போட்டிருக்கும் இந்த அரசு இனியும் பதவியில் நீடிப்பது முறையல்ல.
படுகொலை செய்ததுமட்டுமின்றி தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இணைய சேவைகளையும் தமிழக அரசு முடக்கியிருக்கிறது. பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ள காஷ்மீர் மாநிலத்தில் கையாளப்படுகிற இந்த உத்தியைத் தமிழ் நாட்டில் புகுத்தியிருப்பதன் மூலம் இங்கு சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று ஆளுங்கட்சியே ஒப்புக்கொண்டிருக்கிறது.
தமிழக மக்களின் உரிமைகளைப் பலிகொடுக்கும், அவர்களது உயிர்களுக்கு உலைவைக்கும் அதிமுக அரசின் அராஜகப்போக்கைக் கண்டித்து நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றிப்பெறசெய்ய, தமிழக மக்கள் முழுமையான ஆதரவை நல்கவேண்டுமென்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.