Skip to main content

தீ குளிக்க முயலும் மக்கள்... தத்தளிக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்!

Published on 06/10/2020 | Edited on 06/10/2020

 

thiruvannamalai collector office public issue


கரோனா பரவல் தடுப்பு பணிகளால் மக்கள் கூடும் பல நிகழ்வுகளுக்கு இந்தியா முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த விதிகளை அரசு நிர்வாகமும், அரசியல்வாதிகளும் மீறி வருகின்றனர். லாக்டவுன் தளர்த்தப்பட்டதால் பொதுமக்களும் விதிகளை மீறத்துவங்கியுள்ளார்கள்.

 


தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்ட ஆட்சித்தலைவர்கள், பிரதி திங்கள் கிழமை தோறும் பொதுமக்களிடம் குறைகேட்பு கூட்டம் நடத்துவர். திருவண்ணாமலை மாவட்டத்திலும் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றுவந்தது. கடந்த மார்ச் இறுதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மக்கள் குறை தீர்வு கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டது. கடந்த ஜீலை முதல் பெரிய அளவில் லாக்டவுன் விதிகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.

 


இதனால் பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வருகின்றனர். அரசாங்கம் குறை தீர்வு கூட்டங்களை நடத்த அனுமதி இன்னும் வழங்காததால் பெரும்பாலான மாவட்டங்களில் கூட்டங்கள் நடைபெறுவதில்லை. திருவண்ணாமலை உட்பட சில மாவட்டங்களில் தொலைபேசி வழி குறை கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது. அப்படியிருந்தும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர்களை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை தர வருகின்றனர்.


திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, ஏழை மக்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை நேரடியாக வழங்குவதால் பொதுமக்கள் அவரை பெரிதும் நம்புகின்றனர். அவரை நேரில் சந்தித்து தங்களது குறைகளை சொன்னால் உடனடியாக தீர்வு கிடைக்கும் என நம்புகின்றனர். இதனால் வாரவாரம் திங்கட்கிழமை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரும் மக்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே உள்ளது.

 


இந்நிலையில் இந்த வாரம் சத்துணவு அமைப்பாளர்கள் பணிக்கு நேரடி நியமனம் செய்ய ஆட்கள் தேர்வு செய்யவுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனால் தங்களின் குடும்ப நிலையை விளக்கி வேலை வாங்கிவிட வேண்டும் என நூற்றுக்கணக்கான மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்து பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்களை சமாளிக்க முடியாமல் அதிகாரிகளும், காவல்துறையினர் முழிபிதுங்கினர்.

 


அதேநேரத்தில் கலசப்பாக்கம் அடுத்த கெங்காவரம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை – விஜயா தம்பதியினர். இந்த தம்பதியினருக்கு அருணா என்கிற மகள் உள்ளார். 3 வயதாகும் அருணா மீது கடந்த ஆகஸ்ட் மாதம் சுப்பிரமணி என்பவருடைய லாரி மோதியுள்ளது. இதனால் அவரது கால்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தனது மகளை இரண்டு சக்கர தள்ளுவண்டியில் அழைத்து வந்தனர். விஜயா தன்னிடம்மிருந்த கேனில் இருந்த மண்ணெண்ணயை தன் மீது ஊற்றிக்கொண்டு தீவைத்துக்கொள்ள முயல, போலீஸார் தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றினர். தனது மகள் மீது லாரி மோதியது, அந்த லாரி மீது வழக்குப் பதிவு செய்யாமல் பஞ்சாயத்து பேசிய கலசப்பாக்கம் காவல்நிலைய போலீஸாரும், அதிகாரிகளும். லாரி, ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்து நியாயமாக விசாரணை நடத்த வேண்டும் எனக்கேட்டு மனு தந்துள்ளோம் என்றார்.

 


கீழ்பென்னாத்தூர் அடுத்த கார்கோணம் கிராமத்தை சேர்ந்த வயதான தம்பதிகளான சுப்பிரமணி – குப்பம்மாள் இருவரும் கலெக்டர் அலுவலகத்துக்குள் தீக்குளிக்க முயன்றனர். அவர்களையும் போலீஸாரும், பொதுமக்களும் காப்பாற்றினர். தங்களது நிலத்தை, தங்கள் ஊரை சேர்ந்த வேறு சிலர் தங்களது பெயருக்கு பட்டா மாற்றிக்கொண்டுள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், எங்கள் நிலத்தின் பட்டாவை எங்கள் பெயருக்கு மாற்றி தரவேண்டும் என வருவாய்த்துறை கீழ்நிலை முதல் மேல் அதிகாரிகள் வரை பலமுறை மனு தந்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தான் தீக்குளித்து இறக்கலாம் என வந்தோம் என்றார்கள்.

 


தீகுளிக்க முயன்றவர்கள் மீது திருவண்ணாமலை கிழக்கு காவல்நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து அனுப்பியுள்ளனர். கலெக்டர் பார்வை பட்டால் தங்களது துயரம் தீர்ந்துவிடும் என  மக்கள் மனுக்களோடு வருகிறார்கள். மற்றொரு புறம் மனு தந்தாலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் இதுபோன்ற விபரித முடிவுகளையும் எடுக்கிறார்கள்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்