கன்றுக்குட்டி மேல் பாசம் வைத்தால் அதிகபட்சமாக நாம் என்ன செய்வோம், அதற்கு ஒரு பெயர் வைத்து கொஞ்சுவோம். அதோடு, ஒருப்புடி புண்ணாக்கு அதிகமாக போடுவோம் அல்லது வைக்கோல் கொஞ்சம் அதிகமாக வைப்போம் அவ்வளவு தான். ஆனால் ஒருக்குடும்பம், கன்றுக்குட்டியை தங்களது வீட்டு ஹாலில் வைத்தும், தங்களோடு படுக்க வைத்தும் கொஞ்சுகிறது.
வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் அறிவொளி ஆனந்தன். இவர் குடும்பம் கிராமத்தில் விவசாயம் செய்கிறது. இவரது வீட்டில் பசுமாடுகள் சிலவுள்ளன. சில மாதங்களுக்கு முன்பு இவர்கள் வீட்டில் வளர்க்கப்படும் பசு ஒன்று கன்றுக்குட்டியை ஈன்றுள்ளது. ஆண் கன்றுக்குட்டியான இது பிறந்த சில தினங்களில் இருந்து துள்ளி துள்ளி குதித்து விளையாடுவது, வீட்டுக்குள் சர்வசாதாரணமாக வருவது என இருந்துள்ளது. இவர்களும் கன்றுக்குட்டியை ஆசையாக பார்த்ததால் அவர்கள் அதனை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதனால் இப்போது குடும்ப அட்டையில் பெயர் சேர்க்க சட்டம் இடம் வழங்கினால் சேர்த்துவிடுவார்கள் போல.
கன்றுக்குட்டிக்கு வேலன் என பெயர் வைத்து வளர்க்க துவங்கினர். அது மாடுகள் உணவான புண்ணாக்கு, வைக்கோல், புல், கழனி பானை தண்ணீர் குடிப்பதை விரும்புவதில்லை. ஆனந்தன் தனது 12 வது படிக்கும் மகள் கிருத்திகாவுக்கு வாங்கி வரும் மிக்ஸர், கேக், சாக்லெட், குளிர்பானத்தை தனக்கும் வேண்டும் எனக்கேட்டுள்ளது வேலன் கன்றுக்குட்டி. அதுவும் வெளியே நின்று கேட்பதில்லை. வீட்டுக்குள் வந்து உறவினர்களை உட்கார வைக்கும் ஹாலில் இருந்தபடியும், சமையல் கட்டுக்கு சென்று கத்தியும் கேட்டுள்ளது.
சாப்பிட்டுவிட்டு மாட்டுக்கொட்டகையில் தனது தாய் பசுவுடன் உறங்காமல் கிருத்திகா, ஆனந்தன், அவரது மனைவி உறங்கும் இடத்திலேயே வேலனும் ஹாலில் படுத்துக்கொண்டு தூங்குவது, அதிலும் தனது தலைக்கு தலையாணை இல்லாமல் உறங்காதது என அதன் சேட்டை அதிகமாக உள்ளதாம். இந்த சேட்டையை அவர்கள் ஆசையோடு ரசிக்கின்றனர். என் தம்பி மாதிரி இவன், என்னோடு ஜாலியா விளையாடறான் என சிரித்தபடியே சொல்கிறார் கிருத்திகா.
ஒரு குழந்தையை போல் கன்றுக்குட்டியை வளர்ந்து மனிதர்களோடு நெருங்கி பழகி, குடும்பத்தில் ஒருவராக இருப்பதை பார்த்து அந்த ஊர் பொதுமக்களும், விலங்குகள் நல ஆர்வலர்களே ஆச்சர்யத்தோடு பார்க்கின்றனர்.